படித்த அறிவாளிகள் நினைப்பது சரியா?

நான் ஒரு தனி மனிதன். எனக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லைஎனப் படித்த அறிவாளிகள் பலர் தங்களுக்கென சித்தாந்தங்களும் தத்துவங்களும் வைத்துக்கொள்வதுண்டு. ஆனால், உண்மை நிலவரம் என்ன? இதோ சத்குரு சொல்கிறார்.

கேள்வி: தொப்புள் கொடி அறுபட்டதுமே நாம் ஒவ்வொருவரும் ஒருவகையில் அகதி என்றே தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?

சத்குரு‘உங்கள் அன்னை, தொப்புள் கொடி பந்தம், நீங்கள்’ என நீங்கள் பிரித்துச் சொல்லும் எல்லாமே இந்த மண்ணின் ஒரு அங்கம். இந்த மண்ணின் ஒரு துளி, மேலே எழுந்து ஏதேதோ அடையாளம் கொண்டு ஆடுகிறது. ஆனால் ஒருநாள், மீண்டும் இதே மண்ணோடு ஒன்றாகி மறைகிறது. இந்த நடுநிலையில் உங்களுக்கு ‘உங்களைப்’ பற்றி எத்தனை எத்தனை விசித்திரமான எண்ணங்கள் தோன்றுகிறது!

உங்களுக்கும், எனக்கும் முன்பாக இந்த மண்ணில் பல கோடிபேர் பிறந்தார்கள். வாழ்ந்தார்கள். அவர்களுக்கும் தங்களைப்பற்றி இப்படி எத்தனையோ விசித்திரமான எண்ணங்கள் தோன்றியிருக்கும். ஆனால் இன்று… நாம் காண அவர்கள் யாரும் இங்கு இல்லை. இந்த பூமியின் மேற்பரப்பில் எங்கோ அவர்கள் புதைந்து கிடக்கிறார்கள். நாமும் இதேபோல் புதைந்து போகப் போகிறவர்கள்தான். என்ன, ஒருவேளை நீங்கள் மீண்டும் எழுந்து விடுவீர்களோ என்று புதைப்பவர் அஞ்சினால், உங்களை இன்னும் ஆழமாகப் புதைத்து வைப்பாரோ என்னவோ!

இந்தத் தோற்றம், நாம் வாழும் வாழ்க்கை எல்லாமே தற்காலிகம்தான். ஆனால் இந்தக் குறுகிய காலத்திலும், நீங்கள் மற்றவர்களிடம் இருந்து தனித்திருப்பதாக எண்ணுகிறீர்கள். இந்த ‘நான் வேறு, அதெல்லாம் வேறு’ என்ற உங்கள் பிரித்து அறியும் குணத்தால்தான், அகதியாகவும், அநாதையாகவும் உணர்கிறீர்கள். இது வாழ்வின் இயல்பல்ல. உங்கள் எண்ணங்களின் இயல்பு. எண்ணங்களைத் தோற்றுவிக்கும் உங்கள் மனதின் இயல்பு. தெய்வீகத்தை சென்றடைவதற்கான ஏணியாகவும் நம் மனதைப் பயன்படுத்தலாம், அல்லது இந்த சிறிய உடலுக்குள்ளேயே நம்மை சிறை வைத்திடவும் பயன்படுத்தலாம். சிறையில் அகப்பட்டுக்கொள்ள அதைப் பயன்படுத்திக் கொண்டுவிட்டு, உங்களை நீங்களே அகதியாக உணர்கிறீர்கள்.

இந்த உலகில் ராக்கெட் உருவாக்குகிறார்கள். எந்திரங்கள் உருவாக்குகிறார்கள். கார்கள் உருவாக்குகிறார்கள். ஆனால் மனிதர்களை உருவாக்குவதில் மட்டும் யாரும் கவனம் செலுத்துவதில்லை. இந்த உடலையும், மனதையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளக்கூடிய மனிதர்களை உருவாக்க யாரும் முற்படுவதில்லை. அப்படிபட்ட மனிதர்களை உருவாக்கும் வழிதான் ஆன்மீகம்.

உயர்நிலைகளை அடைய, உடலையும், மனதையும் கருவியாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருந்தால்கூட, அவற்றை உங்கள் உயிரை அழிப்பதற்கு பயன்படுத்திக் கொள்கிறீர்கள். உயிரை அழித்துக் கொள்வது என்றால், தற்கொலை செய்து கொள்வது மட்டும்தான் என்றல்ல. அகதியாக உங்களை தனித்து வைத்துக் கொள்வதும்கூட உங்களை நீங்களே அழித்துக் கொள்வதுதான். பிற உயிர்களை அழிக்க முனைந்தால், அவை தன்னை காத்துக்கொள்ள உங்களை எதிர்க்கும். போராடும். ஆனால் உங்களை நீங்களே அழித்துக் கொள்கையில், அங்கு தற்காப்பிற்கும்கூட வழியில்லை.

அதனால், தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்பவர்களுக்கு மத்தியில் வேண்டுமானால், இதுபோன்ற தத்துவங்களுக்கு மதிப்பு இருக்கலாம். இதுபோன்ற தத்துவங்களை முன்மொழியும் உங்களுக்கும் பாராட்டு கிடைக்கலாம். ஆனால் உண்மையில் இந்தத் தத்துவங்களுக்கு பயன் ஏதும் இல்லை. அவற்றால் எந்த நன்மையும் விளையாது. முடிந்தால், இதுபோன்ற எண்ணங்களை விடுத்து, உங்களையும் மற்ற உயிர்களையும் மேம்படுத்தும் வகையில் உங்கள் எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.