பெருமை பேசவில்லை, பெருமை கொள்கிறேன்! -முதல்வர்

நீட் தேர்வில் 7.5% உள் இட ஒதுக்கீடு

ஆமாம்; பெருமைதான்!

அரசு பள்ளியில் படித்த எனக்கு அரசு பள்ளி மாணவர்களின் கஷ்டம் தெரியும்

பொதுவாகவே இந்திய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது ஒரு இலட்சியக்கனவு. பல மாணவர்கள் தாங்கள் பள்ளியில் படிக்கும் போதே இதற்கு தயார் ஆகி வருகிறார்கள். பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைக்கு மருத்துவப் படிப்பில் சீட் கிடைப்பது என்பது ஏதோ கிடைத்தற்கரிய வரம் போலத் தான் கருதப்படுகிறது. அதற்கேற்ப ஒருபுறம் பெருமை என்றாலும், இன்னொருபுறம் கடும் உழைப்பும் தேவைப்படுவதாகவே இந்த மருத்துவப் படிப்பு இருந்து வந்தது. ஆனால் தற்போது அந்த சூழல் மெல்ல மெல்ல மாறி வருகிறது.

அதுவும் மாறி வரும் அரசியல், சமூக, பொருளாதார சூழல்களில் மருத்துவ கல்லூரி சேர்க்கை என்பது பல வகையிலும் சர்ச்சைக்குரியதாக மாறி வருகிறது. அதுவும் தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை வந்த பிறகு அதற்கு கடும் எதிர்ப்பு தமிழ்நாட்டில் எழுந்துள்ளது. என்றாலும் நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையில் இருந்து மத்திய அரசு பின்வாங்கவில்லை. கடந்த சில ஆண்டுகளில் இது குறித்து பல போராட்டங்கள் எதிர்கருத்துகள் வந்துகொண்டே இருந்தன.

இதற்கு இடையில் மாணவர்களும், பெற்றோர்களும் தான் பாவம், இருப்பதைத் தொடரவும் முடியாமல் வருவதை உடனடியாக எதிர்கொள்ளவும் முடியாமல் திகைத்துப்போய் இருக்கிறார்கள். இதற்கிடையில் நீட் தேர்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கென்றே வடிவமைக்கப்பட்ட சில பயிற்சி நிலையங்களில் பணம் கட்டி ஒரு கை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே அரசுப் பள்ளியில் படித்து வருபவர்கள் பாடுதான் மேலும் மோசமாகியது. அதற்கு நல்ல எடுத்துக்காட்டு அனிதா மரணம்.

இந்த நிலை எப்போது சீராகும் என்று யாருக்கும் தெரியாத நிலையில் தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக  தமிழக அரசு இந்த 7.5% உள் இட ஒதுக்கீட்டை அறிவித்திருக்கிறது. நீதியரசர் கலையரசன் அறிவித்த பத்து சதவீதத்துக்கு மிகாமல் என்ற அடிப்படையில் இந்த 7.5% உள் இட ஒதுக்கீட்டை தமிழக அரசு பல வித கருத்துப் பரிமாறல்களுக்குப் பிறகு அறிவித்திருக்கிறது. இடையில் இந்த சிக்கல் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் அலுவலகத்தில் அது முடிவெடுக்கப்படாமல் இருந்து வந்தது. இடையில் மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கப் போவதாக செய்திகள் வந்து மாணவர்களும், பெற்றோர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போன நிலை. தமிழக அமைச்சர்கள் இது குறித்து ஆளுநரை சந்தித்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் தான் தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி இந்த 7.5% இட ஒதுக்கீட்டை அறிவித்து அது இன்று பலனையும் தந்திருக்கிறது. இது குறித்த பல விவாதங்கள் கிளம்பி நடைபெற்று வருகின்றன.

இங்கே சில செய்திகளை புரிந்து கொள்ள வேண்டும். முதலில் அரசுப்பள்ளி மாணவர்கள் என்றாலும் நீட் தேர்வு எழுதியவர்களுக்குத் தான் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. என்றாலும் தமிழகத்தில் இருந்து கடந்த ஆண்டு 8 மாணவர்கள் என்ற எண்ணிக்கை இன்று 300ஐ கடந்து இருக்கிறது.

நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறோம் என்று சொன்னாலும் அது எவ்வளவு தூரம் எடுபடும் என்று தெரியவில்லை. இந்த நிலையில் நமது மாணவர்களின், குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களின்  எதிர்காலம் வீணாகி விடக்கூடாது என்ற வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. நேரடியாக 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் பலன் தந்தது போல மற்றவர்களுக்கும் இது போன்ற தீர்வு காண வாய்ப்பு உள்ளதா எனத் தெரியவில்லை.

ஆனால் இன்றைய நிலையில் திரு எடப்பாடி பழனிச்சாமி,  அவரே சொல்வது போல ஒரு அரசுப் பள்ளியில் படித்தவர், முதலமைச்சராக உயர்ந்து அரசுப்பள்ளி மாணவர்களுக்காக, அவர்களின் எதிர்காலத்துக்காக கொண்டு வந்துள்ள இந்த 7.5% இட ஒதுக்கீடு கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அரசியல் ரீதியாக இது அவருக்கு பெருமையே. அரசு நினைத்தால் மக்கள் நலத்துக்காக என்ன செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அரசியல் ரீதியாக இது பல விவாதங்களையும், கருத்துகளையும் உருவாக்கலாம், அல்லது வருகின்ற தேர்தலில் இது எவ்வளவு வாக்குகளை பெற்றுத் தரும் என்று சொல்ல முடியாமல் இருக்கலாம். என்றாலும் இந்த 7.5% உள் இட ஒதுக்கீடு என்பது கொட்டும் மழையில் கைக்கு கிடைத்துள்ள ஒரு குடை, பாலைவனத்தில் கிடைத்துள்ள ஒரு நிழல் என்றே மக்கள் நினைக்கிறார்கள். இதுவும் இல்லை என்றால் இந்த முந்நூறு பேரும் அந்த வாய்ப்பை இழந்திருப்பார்கள் என்ற வகையில்  இதை வரவேற்கிறார்கள். அந்த வகையில் அரசுப்பள்ளியில் படித்த ஒருவர் ஆட்சியில் அமர்ந்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செய்துள்ள பெருமைமிகு செயல் தான் இது. இது பொன்னாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் பூவாக மலர்ந்திருக்கிறது.

அண்மையில் கோவை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை முதல்வர் சந்தித்தார். அப்போது 7.5% இட ஒதுக்கீடு பெற்றது குறித்து பெருமை பேசுறீங்க என்ற கேள்விக்கு சற்று கோபமான முதல்வர், அரசு பள்ளியில் படித்த எனக்கு அரசு பள்ளி மாணவர்களின் கஷ்டம் தெரியும் அதனால் பெருமை பேசவில்லை பெருமை கொள்கிறேன் என்று பதிலளித்து முதல்வர் திரும்பி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பெருமை அடைவது போல நாமும் பெருமை அடைவோம்.