டெங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகக் கூட்டரங்கில் டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது, கோவை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு பரவுதலைத் தடுக்க தினந்தோறும் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் வீதி வீதியாக கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் செல்லும் இடங்களில் கொசு மருந்து தெளிப்பதை அதிகப்படுத்திட வேண்டும் எனவும், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் நீர்தேக்கத்தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்ற வேண்டும், தேவையற்ற பொருட்களை அகற்றப்பட வேண்டும்.

மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் பூங்காக்கள் ஆகிய பகுதிகளில் கொசு ஒழிப்புப்பணியாளர்கள் மூலம் கொசு மருந்துகள் தெளிக்கப்பட வேண்டும், டெங்கு பரவுதலை கட்டுப்படுத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என துறைசார்ந்த அலுவலர்களிடம் தெரிவித்த மாநகராட்சி ஆணையாளர், தொடர்ந்து, கோவை மாநகராட்சியில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றிட வேண்டும், இவ்வாறு கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்த ஆணையாளர், மண்டல வாரியாக கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை கேட்டறிந்து பின்னர், கள பணியாளர்கள் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல், இருமல் மற்றும் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களைக் கண்டறியப்படும் முறைகளை குறித்தும், மண்டல வாரியாக நடைபெறும் சிறப்பு முகாம்கள் குறித்தும் கேட்டறிந்த ஆணையாளர், கொரோனா தொற்று பரவுதலை முற்றிலும் தடுக்க பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.