ஹாலிவுட்டில் களம் இறங்கும் இந்தியப் பெண்

பெண்ணாகப் பிறந்தால் அவளுக்கென்று சில கடமைகள் குடும்பத்தில் இருக்கும். பொதுவாக, ஒரு பெண் வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொள்பவள் என்பது மட்டும் கிடையாது. அதையும் தாண்டி அப்பெண்ணுக்கு சில திறமைகள் இருக்கும்.

சில பெண்கள் திறமைசாலிகள் என்றாலும் வாய்ப்பில்லாமல், தனது ஆசைகளை மனதில் புதைத்துக்கொண்டு, தன்னை சார்ந்த குடும்பத்திற்காக அர்ப்பணிப்புடன் வாழ்ந்துவருவர். ஆனால் சிலர் எத்தனை பிரச்னை வந்தாலும் தன்னம்பிக்கையுடன், பல்வேறு இன்னல்களைத் தாண்டி செயற்கரிய செயல்களைச் செய்து புகழ்பெறுவர். அவ்வாறான செயல்நாயகி ஒருவர், சினிமா உலகத்தில் காலடி எடுத்து வைத்து அதில் முன்னேற்றத்தைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்.

நித்யா ரமேஷ்:

இவங்க மனதில் சிறு வயதில் இருந்து சினிமா மேல் ஒரு தனி ஈர்ப்பு இருந்துள்ளது. ஆனால் இவர் படித்த படிப்போ, B.E இருப்பினும், இவர் மனதில் சினிமா மீதான காதல் குறையவில்லை. எப்படியாவது சினிமாவில் ஒரு நல்ல ஹீரோயின் ஆகிவிட வேண்டும் என நினைத்து, தன்னை அதற்கேற்ப மிக அருமையாக தயார்படுத்திக் கொண்டு இருந்தார்.

இந்நிலையில் இவரது அழகைப் பார்த்து, நீங்கள் ஏன் மாடலிங் பண்ணக் கூடாது என் நண்பர்களின் உற்சாகத்தில், துணிச்சலும் தைரியமும் அரும்பியது. எப்படியும் சினிமாத்துறையில் வெற்றி பெறுவோம் என்ற உறுதியுடன், உடல், மன ரீதியாக தன்னைத் தயார்படுத்திக் கொண்டு மாடலிங் துறையில் ஈடுபட ஆரம்பித்தார் நித்யா ரமேஷ்.

ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திலும் இவருடைய திறமையைப் பார்த்து வியந்துள்ளனர். ஆனால் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அத்தருணத்தில் புரி ஜகநாத்தை சந்திக்கும் வாய்ப்பு  இவருக்கு கிடைத்தது. அவருடைய படத்தில் சான்ஸ் கிடைக்குமா என்று எண்ணிக்கொண்டு இருக்கும் வேளையில், இயக்குநர் புரி ஜெகநாத், இவர் திறமையைப் பார்த்த பிறகு, இவருக்குள் இருக்கும் சினிமா வேறு ஒரு புது வடிவத்தைக் கொடுக்கும் என நினைத்து, ‘நீங்கள் ஏன் உதவி இயக்குநராக பணியாற்றக் கூடாது’என்று கேட்டுள்ளார். இவரது மனதில் ஒரு புது ஆனந்தம் ஏற்பட்டது. உடனே ‘சரி’என்று ஒப்புக்கொண்டார். ஆனால், புரி ஜெகநாத் அடுத்து சொன்னது இவரை மேலும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அவர், ‘நீங்கள் என்னிடம் பணியாற்ற வேண்டாம். இயக்குநர் ராம் கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றுங்கள். நான் வாய்ப்பு வாங்கித் தருகிறேன்’என்று கூறியுள்ளார். இவர் சந்தோசத்தின் உச்சத்திகே சென்று விட்டார்.

இதையடுத்து இவர் தன்னை மேலும் தொழில் ரீதியாக தயார்படுத்திக் கொண்டு ராம் கோபால் வர்மாவிடம் பணியாற்றத் தொடங்கினார். அதன் பயனாக, ராம்கோபால் வர்மாவின்‘சர்கார் 3’ படத்தில் முதல் உதவி இயக்குநர் பதவி கிடைத்தது.

அப்படப்பிடிப்பு தளத்தில் நடித்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிப்பைப் பார்த்து வியந்த இவர் மனதில் ‘நாம் ஏன் குறும்படம் எடுக்கக்கூடாது’என்று யோசனை தோன்றியுள்ளது.

இதையடுத்து ஹாரர், த்ரில்லர் சமந்தப்பட்ட கதைக் களத்தில் ஒரு குறும்படம் எடுக்கத் துவங்கினார் நித்யா ரமேஷ். குறும்படம் எடுத்து முடித்த பிறகு அத்திரைப்படத்தின் ட்ரைலரை பார்த்த ஹாலிவுட் காஸ்டிங் இயக்குநர் கேத்தி ஸ்மித், ‘ஒரு இந்திய தமிழ் பெண் எவ்வளவு அருமையாக படம் எடுத்திருக்கிறார் என்று வியப்பில் ஆழ்ந்தார். உடனே அவர் பாரேன் துரையேன் ஹாலிவுட் புரொடக்சனில் மிக விரைவில் நித்யா ரமேஷ் ஹாலிவுட் படம் ஒன்றை இயக்கும் சூழல் வரும் என்று கூறியுள்ளார்.

ஒரு இந்திய பெண்ணுக்கு மரியாதையும் மற்றும் பெண்கள் சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் நித்யா ரமேஷ் இருப்பார் என்றால் அது மிகையாகாது. இவரின் வாழ்க்கையில் கிடைத்த அத்தனை அனுபவங்களும் நம் தமிழ் பெண்களின் திறமைக்கு கிடைக்க வேண்டும் என்று நாம் புரிந்துகொண்டு, சாதனைப் பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று உறுதிகொள்வோம்.

– பாண்டியராஜ்