நீலகிரியில் 447.32 கோடியில் மருத்துவமனையுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும்

நீலகிரியில் முதல்வர் உரை

நீலகிரி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் நோய் தொற்றுப் பரவலைத் கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக தொடர்ந்து எடுத்து வருவதன் விளைவாக, நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்பொழுது இந்தத் தொற்று நோய் ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 2,500-க்கும் குறைவாக உள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, மருத்துவ நிபுணர்கள் குழு ஆகியோரின் ஆலோசனைகளின்படி நடவடிக்கைகளை மேற்கொண்ட காரணத்தினால், இந்நோய்த் தொற்றுப் பரவல் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. அண்டை மாநிலங்களில் குறைவாக இருந்த இந்நோய்த் தொற்று தற்பொழுது அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில், ஆரம்பத்திலேயே தீவிரமாக முயற்சி எடுத்ததன் மூலம் இந்நோய்த் தொற்றுப் பரவல் குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க ஆங்காங்கே காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. நடமாடும் மருத்துவக் குழுக்களும், அரசால் நியமிக்கப்பட்ட அலுவலர்களும் வீடு, வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து,  மக்களுக்கு பரிசோதனைகள் செய்து, அறிகுறிகள் தென்பட்டவர்களை மருத்துவமனைகளில் சேர்த்து, சிகிச்சை அளித்து, குணமடையச் செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், கொரோனா தொற்றைக் கண்டறிய பரிசோதனைகளை அதிகரித்துள்ளோம். தற்பொழுது இந்நோய்த் தொற்று குறைந்திருந்தாலும்கூட, சராசரியாக நாளொன்றுக்கு 70 ஆயிரம்  பரிசோதனைகள் செய்கிறோம். இவ்வாறு அதிகளவில் பரிசோதனை செய்வதால் இந்நோய்த் தொற்றுப் பரவலைத் தடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனையும், பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் இருந்தாலும்கூட, இங்குள்ள மக்கள் உயர்தர சிகிச்சை பெற கோவை செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதைக் கருத்தில் கொண்டு, நீலகிரி மாவட்டத்தில் ரூபாய் 447.32 கோடி மதிப்பீட்டில் உயர்தர சிகிச்சை அளிக்க மருத்துவமனையுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும் என்று அறிவித்து, கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இக்கல்லூரியில், ஆண்டுதோறும் 150 மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்வி பயிலக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீலகிரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகிய இரண்டையும் நிறைவேற்றித் தந்தது இந்த அரசு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள மலைவாழ் மக்கள், குறிப்பாக பெண்கள் சுயமாகத் தொழில் தொடங்குவதற்கு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிகளவில் நிதியுதவி வழங்கப்படுகிறது.

2020-21ஆம் ஆண்டு மட்டும் கோவிட்-19 சிறப்பு நிதிக் கடனாக ரூபாய் 56 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 861 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 7.54 கோடி வழங்கியுள்ளோம். நீலகிரி மாவட்டத்தில் 8,247 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 25,339 பெண்கள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். கடந்த 2019-20ஆம் நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் இணைப்பாக 225 கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 225 கோடி ரூபாயும் முழுமையாக வழங்கப்பட்டு இலக்கு அடையப்பட்டது. 2020-21ஆம் நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் இணைப்பாக 281 கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை 185 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.