விமான நிலையங்களிலும், விமானத்திலும் முதல் அறிவிப்பு தமிழில் வெளியிட நடவடிக்கை – அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமானத்திலும் முதல் அறிவிப்பு தமிழில் வெளியிடுவது தொடர்பாக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், மத்திய அமைச்சருடன் சந்தித்து பேசினார்.

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு இன்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் செயலாளரை அவர்களது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், தமிழகத்தில் இருந்து புறப்படும் விமானங்களிலும், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் விமானங்களிலும் முதல் அறிவிப்பு தமிழில் இடம்பெற வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

மேலும் பொங்கல் பண்டிகைக்குள் சென்னையில் தரை இறங்கும் அனைத்து விமானங்களிலும் முதல் அறிவிப்பு தமிழ் மொழியில் இடம்பெறும் என நம்புவதாக கூறிய அமைச்சர், அதே சமயம் அலுவல் மொழி சட்டத்தில் தமிழும் இடம் பெற வேண்டும் என மத்திய அலுவல் மொழி செயலாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே அமைச்சரின் இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்புகள் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விமான நிறுவனங்களுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.