பாஜக சார்பில் ஜான்சி ராணி வேடமிட்டு 50க்கும் மேற்பட்ட பெண்கள் வாகன பேரணி

பாரதிய  ஜனதா கட்சி சார்பில் வெற்றிவேல் யாத்திரையானது நவம்பர் 6ம் தேதி துவங்கி முருகனின் முக்கிய வழிபாட்டு தலங்கள் வழியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கணுவாய்-யில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜான்சி ராணி வேடமிட்டு 50க்கும் மேற்பட்ட பெண்கள் 2 சக்கர பேரணி சென்றனர்.

கோவை கணுவாய் பேருந்து நிறுத்தம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரை வரும் 6ம் தேதி தொடங்வுள்ள நிலையில் அதனை வரவேற்கும் விதத்தில் மாநில இளைஞரணி செயலாளர் பீர்த்தி லட்சுமி தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஜான்சி ராணி வேடமிட்டு 2 சக்கர வாகனத்தில் ஊர்வலமாக மருதமலை வரை செல்லும் பேரணி நடைபெற்றது. இதில் கோவையை சேர்ந்த கியர் அப் பைக்கர்ஸ் என்ற குழுவை சேர்ந்த பெண்களும் இணைந்து கியர் பைக்குகளை ஓட்டி சென்றனர். முன்னதாக இந்த பேரணியை மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.செல்வக்குமார் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து அருகில் உள்ள முருகன் கோவிலில் பூஜை செய்து இந்த பேரணி தொடங்கப்பட்டது. இந்த பேரணியில் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜ், வடக்கு மாவட்ட தலைவர் சிவசக்திவேல், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பொறுப்பாளர் திருநாவக்கரசு, கணேஷ், மாவட்ட மகளீர் அணி செயலாளர் மஹாலட்சுமி, கண்ணன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.