கவிஞர் வாலி பிறந்த தினம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர், பாடலாசிரியர் மற்றும் சிறந்த ஓவியருமான கவிஞர் வாலி 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன் ஆகும்.

1958 ஆம் ஆண்டு ‘அழகர் மலைக் கள்வன்’ என்ற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதினார். 1963 ஆம் ஆண்டு ‘கற்பகம்” என்ற திரைப்படத்தில் இவர் எழுதிய பாடல்கள் இவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

ராமானுஜ காவியம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் என பதினைந்து புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். மேலும் கலியுகக் கண்ணன், காரோட்டிக் கண்ணன், ஒரு செடியில் இரு மலர்கள் என சுமார் பதினைந்து திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் பொய்க்கால் குதிரை, சத்யா, பார்த்தாலே பரவசம், ஹே ராம் என நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டு பாரத விலாஸ் திரைப்படத்தில் ‘இந்திய நாடு என் வீடு” என்ற பாடலுக்காக தேசிய விருதை வென்றுள்ளார்.

திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய இவர் 2013 ஆம் ஆண்டு மறைந்தார்.