‘பண்டிகைக் காலம்’ உஷார்!

ஆம். இந்தியப் பிரதமர் மன் கி பாத்தில் சொன்னதுதான்.கொரோனா தொற்று இன்னும் தீரவில்லை, குறைந்திருக்கிறது அவ்வளவுதான். இன்னும் ஆங்காங்கே ஆம்புலன்ஸ் சத்தமும், பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர் பட்டியலும் வந்துகொண்டுதான் இருக்கின்றது. நமது ஊரின் ஒரு பகுதியில் சிலர் தொற்றால் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் தற்போது விழாக்கால சீஸன் தொடங்கி இருக்கிறது. இந்த கொரோனா தொற்றின் முதல் எதிரி கூட்டமாக மனிதர்கள் இணைந்து செயல்படுவதுதான். ஆனால் மனிதர்கள் ஒருவருக்கொருவர் இணைந்து கொண்டாடுவதற்காகத்தான் இந்த பண்டிகைகளே உருவாக்கப்பட்டன. கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டன. பல நூறு ஆண்டுகளாக இந்த பண்டிகைகள், எந்தவித வேறுபாடும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு பெரும் இடையூறாக இந்த கொரோனா தொற்று வந்து சேர்ந்திருக்கிறது.

ஆயுதபூஜை, விஜயதசமி, மிலாடி நபி, தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் என்று வரிசையாக விழாக்கள் வரத்தொடங்கும் இந்த நேரத்தில் கொண்டாட்டத்தோடு, நாம் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

இந்த விழாக்களைப் பொறுத்தவரை மகிழ்ச்சி என்பதோடு சகமனிதர்களை நேசிக்கும் மனோபாவமும் இதில் அடங்கி இருக்கிறது. இன்றைய கொரோனா தொற்று பரவல் சூழ்நிலையில், அதுவும் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் முடங்கி இருந்த மக்கள் சமூகம் மெல்ல விழித்தெழும் வேளை இது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆயிரமாயிரம் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் ஒரு சிறு அளவிலாவது பிழைப்பை, உணவை, மகிழ்ச்சியை வழங்குபவை இந்தக் கொண்டாட்டங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. என்றாலும் அதை மக்கள் எச்சரிக்கையாக அணுக வேண்டிய சூழலில்தான் இன்றும் இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. கொரோனா தொற்று பாதித்த முதல் மாதத்தில் நாம் எவ்வளவு பதட்டத்துடன் இருந்தோம், ஊரடங்குக்கு கட்டுப்பட்டு எப்படி முடங்கி இருந்தோம், அத்தியாவசியப் பொருட்களுக்கேக்கூட எப்படி சிரமப்பட்டோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இப்போதுதான் வெள்ளம் வடியத்தொடங்கியது போல, கொஞ்சமாக தொற்று குறையத் தொடங்கியது போல தோன்றுகிறது. இந்த நேரத்தில் கொண்டாட்டங்களின் பெயரால் அதைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது. தமிழகத்தைவிட மிகக் குறைந்த பாதிப்பு கொண்ட கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்றுபரவல் அதிகரித்ததற்கு ஓணம் பண்டிகையை ஒரு முக்கியக் காரணமாக கூறுகிறார்கள்.

எனவே, நாம் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது. அதைத்தான் இந்தியப் பிரதமர் தனது உரையில் வலியுறுத்தி இருக்கிறார். ஒவ்வொரு இந்திய குடும்பமும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் அறிவுப்பூர்வமாக சிந்தித்து நடந்து கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். சுகாதாரத் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல துறைகளின் அரசாங்கப் பணியாளர்களும், மருத்துவர்களும், இந்த கொரோனா தொற்றுடன் போராடி ஓய்ந்துபோய் இருக்கிறார்கள். அவர்கள் சுமையைக் குறைக்க வேண்டியது நமது கடமை. இந்த நேரத்தில் அவர்கள் தலையில் புதிய சுமையை ஏற்றிவிடக்கூடாது.

இதில் சாதாரண மனிதர் தொடங்கி அனைவருக்கும் பொறுப்பும், கடமையும் இருக்கிறது. குறிப்பாக, பொருளாதாரம் சார்ந்த இயங்கும்போது எல்லோருக்கும் அந்தத் தேவை இருக்கிறது. என்றாலும் கூட்டத்தைக் கூட்டி கொரோனா தொற்றைக் கூடுதலாக வழங்கிவிடக்கூடாது. அதை உணர்ந்து தனிநபர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

கொண்டாட்டமும் அவசியம்; அதே நேரத்தில் மக்களின் பாதுகாப்பும் முக்கியம் என்ற அளவில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் முகக்கவசம், கைகழுவுதல், சமூக இடைவெளி என்ற முப்படைவீரர்களை நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

இந்த நேரத்தில் இன்றைய இந்தியாவின் முதுபெரும் தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாட்டா சொன்னதை நினைவுகூர்ந்து கடைபிடிப்பது அவசியம். இந்த 2020ம் ஆண்டின் செயல்திட்டம் என்ன என்ற கேள்விக்கு அவர் அளித்தபதில்தான் அது.

அந்த பதில் இதோ,‘நாம் ஒவ்வொருவரும் நலமுடன் இருக்கிறோம் என்பதே நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். அதுவே இந்த ஆண்டின் செயல் திட்டமாக இருக்க வேண்டும்! இதுவே நமது விழாக்கால செய்தியாக, சகமனிதர்களுக்குத் தெரிவிக்கும் முதல் வாழ்த்தாக இருக்கட்டும்!’