“தொட்டில் பழக்கம் சுடுகாடு முட்டும் !” – இது உண்மையா?

“தொட்டில் பழக்கம் சுடுகாடு முட்டும்!” இந்த பழமொழியில் சொல்வதுபோல் சில பழக்கங்களை கடைசிவரை நம்மில் பலரால் விடமுடிவதில்லை. பலர், பழக்கதோஷமாகச் செய்யும் சில செயல்களைத் தங்களின் அடையாளமாகவும் தங்களின் பாணியாகவும் கருதுகிறார்களே, இதுபற்றி சத்குரு சொல்வதென்ன?! விளக்கம் தருகிறது இந்த பதிவு!

சத்குரு:

சுலபமாக இயங்குவதற்காகவே மனிதன் பலவற்றைப் பழக்கமாக்கிக் கொண்டான்.

அதை நீங்கள் தாயின் கருப்பையில் பற்றிக் கொண்டிருக்கலாம், தொட்டிலில் ஆரம்பித்திருக்கலாம் அல்லது சுடுகாட்டுக்கு போவதற்கு சற்று முன்புகூட வழக்கமாக்கிக் கொண்டிருக்கலாம். எப்படி இருந்தாலும், பழக்க தோஷத்தில் செய்யும் எதுவும் தகர்க்கப்பட வேண்டியதுதான்.

பழக்கத்தின் காரணமாக நடக்கும் வாழ்க்கை புத்திசாலித்தனமான வாழ்க்கை அல்ல. தொட்டில் காலத்திலிருந்து கற்றுக்கொண்ட சில விஷயங்கள் கடைசி வரை தங்கி விடுவதாலேயே சிலரால் வளர்ச்சி காண முடியாமல் போகிறது.

மிருகங்களுக்கு தங்கள் குணங்களைத் தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பு தரப்படவில்லை. ஆனால் மிருகங்களைப்போல் நாம் இல்லை. மிகக் குறைந்த அளவு குணங்களே நம்மால் மாற்ற முடியாதவை. நாமாக அமைத்துக்கொள்ளக் கூடிய குணங்களே அதிகம்.

அவரவர் வளரும் சூழ்நிலையைப் பொறுத்துதான் பக்குவமற்ற வயதில் சேகரித்த பழக்கங்கள் தொடர்கின்றன. அம்மாவையும், அப்பாவையும் இறுகப் பற்றிக்கொண்டு வாழும் குழந்தை, தன் பழக்கங்களைக் கைவிட முடியாமல் போகிறது.

வாழ்க்கையை தினம்தினம், கணத்துக்குக் கணம் புதிய துடிப்புடன் வாழ விரும்புபவர்கள் யாரும், தங்களுடைய பாணி என்று ஒரு பழக்கத்தை அமைத்துக்கொள்ள விரும்புவதில்லை.

வாழ்க்கையில் மிக கவனமாக பழக்கங்கள் என்று எதையும் அமைத்துக்கொள்ளாமல், ஒவ்வொரு முறையும் முழு கவனத்துடன், நூறு சதவிகித ஈடுபாட்டுடன் செயலாற்றினால்தான் மேன்மை பெற முடியும். இல்லை என்றால் சுடுகாட்டைத் தாண்டியும் சில பழக்கங்கள் தொடரக் கூடும்.

பழக்கத்தின் அடிப்படையில் நிகழும் வாழ்க்கையில் ஆழமான அனுபவங்கள் கிடையாது. இதனால் வாழ்க்கையின் உண்மையான ருசி தெரியாமலே போய்விடும்.

உங்கள் உடலின் ஒவ்வொரு அசைவையும்கூட முழுமையாக கருத்தூன்றி செய்யுங்கள். வாழ்க்கை மிக சக்தி வாய்ந்ததாக அமைந்துவிடும். ஒவ்வொரு மூச்சையும் கவனத்துடன் சுவாசித்தீர்களேயானால், அந்த மூச்சின் சக்தியே வித்தியாசமானதாகி விடும்.

கவனமற்று வாழ்வது என்பது மிக சக்திவாய்ந்த இயந்திரத்தை முடக்கி வைத்திருப்பதுபோல, அது எந்த விதத்திலும் புத்திசாலித்தனமல்ல.

பழக்கங்களைத் தகர்த்துவிட்டு ஒவ்வொரு கணத்தையும் கருத்தூன்றி வாழுங்கள். புதிய உலகம் காண்பீர்கள்.