மாநகர் பகுதியில் புதிதாக 203 கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணி துவக்கம்

கோவையில் ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி திருட்டு குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதால் அவற்றை தடுப்பதற்காக ராமநாதபுரம் மாநகர போலீசார் புதிதாக 203 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ளது. தன்னார்வலர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்களுடன் இணைந்து இந்த பணியை ராமநாதபுரம் போலீசார் மேற்கொண்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் இயங்குவதை கண்காணிக்க நஞ்சுண்டாபுரம் சாலையில் புதிய கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மற்றும் நஞ்சுண்டாபுரம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் குறித்தான அனைத்து கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்படும் எனவும் இரவு நேரங்களில் ரோந்து பணி நடைபெறும் எனவும் தெரிவித்தனர். குறிப்பாக குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள மூன்றாவது கண்ணாக சிசிடிவி இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல்துறை ஆணையர் சுமித் சரண், மற்றும் துணை ஆணையர் உமா, ஸ்டாலின், ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் காவல்துறையின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் சிசிடிவி கேமராக்கள் காவல்துறைக்கு உதவியாக இருப்பதாகவும் பொதுமக்கள் உடன் இணைந்து இந்த பணியை காவல்துறை மேற்கொள்வது மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார். மேலும் சிறப்பான பணியை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு வாழ்த்துகளும் பாரட்டுகளும் தெரிவித்தார்.