நுண்ணறிவு என்பது நாம் பெற்ற அறிவு

சுனிதா குமாரி

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மேலாண்மையியல் துறை சார்பாக “உணர்வுசார் நுண்ணறிவு மற்றும் மனநிலை வளர்ச்சி” குறித்த மாணவர்கள் மேம்பாட்டு நிகழ்வு இணைய வழியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோவை அமிர்தா விசுவ வித்யாபீடத்தின் (L&D) மேலாளர், சுனிதா குமாரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள். இவர் பேசுகையில், உணர்வுசார் நுண்ணறிவு மன்ற அறிக்கையின் வழி 2020 ஆம் ஆண்டில் தொழில் நிறுவனங்களில் உணர்வு சார் நுண்ணறிவு மிக முக்கிய திறன்களில் ஒன்றாக விளங்கும் என்பதை எடுத்துக் கூறினார். நுண்ணறிவு என்பது நாம் பெற்ற அறிவு என்றும் அதனை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் எடுத்துக்கூறி, குறைந்த நுண்ணறிவு உடையவர்கள் அனைத்துச் செயல்பாடுகளிலும் அச்ச உணர்வு பெற்றவர்களாக இருப்பதை எடுத்துரைத்தார்.

தனிப்பட்ட திறன்களாகவும் திறமைகளாகவும் விழிப்புணர்வு, சுயக்கட்டுப்பாடு, முயற்சி முதலியனவும் சமூகத்திறன்களாக சமூகசேவையினையும் எடுத்துரைத்தார். தொழிலில் கவனம் செலுத்துபவர்கள் மேல்படிப்பு, பணி அனுபவம், சந்தைப் போக்கை புரிந்து கொள்ளுதல், ஆளுமை வாயிலாக ஆர்வமுள்ள பணிகளை ஏற்படுத்திக் கொள்ளுதல், கோட்பாடு மற்றும் அதன் பயன்பாடு, நிதித் தரவை விளக்குதல், சந்தைப்படுத்துதல், நடவடிக்கைகளைக் கவனித்தல் போன்றவற்றைச் சரிவர கையாளுதல் வேண்டும் என்று எடுத்துரைத்தார். இதற்கு கடினத் திறன்கள் மற்றும் மென் திறன்கள் தேவைப்படுகின்றன என்பதை விளக்கிக் கூறி உரையை நிறைவு செய்தார்.

மேலாண்மையியல் துறை இணைப்பேராசிரியை வனிதா ஒருங்கிணைத்து வழங்கிய இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கிச் சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்விற்கு மேலாண்மையியல் இரண்டாமாண்டு மாணவி சுவேதா வரவேற்புரையும் மேலாண்மையில் முதலாமாண்டு மாணவன் அபிலாஷ் நன்றியுரையும் மேலாண்மையியல் முதலாமாண்டு மாணவி பூர்ணிமா ஸ்ரீ சிறப்பு விருந்தினர் அறிமுகமும் வழங்கினர். நிகழ்வில் முதன்மையர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என 155க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.