266 பயனாளிகளுக்கு ரூ.86.86 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று(20.10.2020) அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் கலந்துகொண்டு 266 பயனாளிகளுக்கு ரூ.86.86 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், அவர் பேசுகையில், புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா வழியில் தமிழக முதல்வர் அனைத்து தரப்பு மக்களாலும், பாராட்டும் வகையிலான வளர்ச்சித் திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றார். அன்னூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலும் தேர்தல் நேரத்தில் தரப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சாலை வசதிகள், குடிநீர் தேவை, தெருவிளக்கு, உயர்மின்கோபுர விளக்குகள் என எண்ணற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கோவை முதல் மைசூர் வரை செல்லும் சாலை விரிவாக்க முன்னேற்ப்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. வட்டாட்சியர் அலுவலகம் சுமார் 2.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. அன்னூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அத்திக்கடவு அவினாசி திட்டம் என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம் நிறைவேற்றப்பட்டதும் அம்மா ஜெயலலிதா வழியில் செயல்படும் தற்போதைய ஆட்சிக்காலத்தில் தான்.

இத்திட்டத்திற்கு, தமிழக அரசால் 1,652 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பகுதி மக்களின், 60 ஆண்டு கால கனவு நிறைவேற்றபட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க இயல்வதுடன், நீர் ஆதாரங்களை பெருக்கும் வகையில் குளம் குட்டைகள் புணரமைக்கப்படுவதினால், இப்பகுதிகளில் நீராதாரங்கள் புத்துயிர்பெறும். என சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தெரிவித்தார்.