நீலகிரி கலை கல்லூரியில் மெய்நிகர் மாநாடு

நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய கல்வி கொள்கை குறித்து மூன்று நாள் மெய்நிகர் மாநாடு அக்டோபர் 18, 19, 20 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

முதல் நாளில் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜி மாதவன் நாயர் தேசிய கல்வி கொள்கை குறித்து உரையாற்றினார். இரண்டாம் நாளில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்  டாக்டர் காளிராஜ் இந்தியாவில் உயர் கல்வியில் பெரிய சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்துவது பற்றியும் தேசிய கல்வி கொள்கை செயல்படுத்துவதில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்கு மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் பங்கு பற்றியும் மிக சிறப்பான முறையில் உரையாற்றினார். மூன்றாம் நாளில் முன்னாள் ஐ.நா இந்திய தூதர் பேராசிரியர் சீனிவாசன் தேசிய கல்வி கொள்கையின் இன்றைய சவால்கள் மற்றும் உலகமயமாக்கல் பற்றி சிறப்பான முறையில் உரையாற்றினார்.

மூன்று நாள் நடைபெற்ற ஆன்லைன் கருத்தரங்கிற்கு ஒரு நாளில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பிற பொது நபர்கள் என சுமார் 1500 க்கு மேற்பட்ட நபர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர் டாக்டர் விமலா, மலையாள பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் பேராசிரியர் உமர் பாரூக், கிறிஸ்டு ஜெயந்தி கல்லூரியின் துறைத் தலைவர் பேபி, யுஜிசி பியர் குழுவின் உறுப்பினர் ஜோசப், சிஎம்எஸ் கல்லூரி பேராசிரியர் ரவி, நீலகிரி கல்லூரியின் அகாடமிக் டீன் மோகன் பாபு மற்றும் நாடு முழுவதும் கல்வித்துறையில் உள்ள நிபுணர்கள் இந்த நிகழ்வின் குழு விவாதங்களில் பங்கேற்றனர். சர்வதேச பயிற்சியாளர் மற்றும் மேலாண்மை ஆலோசகராக இருக்கும் கல்லூரி செயலாளர் ரஷீத் கசாலி நடுவராக இருந்தார். நிகழ்வுக்குப் பிறகு இதில் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு ஆன்லைன் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

உயர்கல்வி மதிப்பாய்வு இதழ் நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, நாட்டின் முதல் பத்து கற்றலின் புதுமையான முயற்சிகளை கையாளும் கல்லூரிகளில் நீலகிரி கல்லூரியும் ஒன்றாகும். இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும் கூட ஆன்லைன் சாத்தியக்கூறுகளைப் பயன்படுத்தி பல்வேறு திட்டங்கள், வெப்பினார்கள் ஆன்லைன் பயிற்சி பட்டறைகள் மூலம் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. கொரோனாவுக்கு பிறகு ரோபாட்டிக்ஸ், டிஜிட்டல் கற்பவர்களுக்கு என ‘டிஜிட்டல் கற்பித்தல்’ போன்ற தலைப்புகளில் நடத்தப்பட்ட வெப்பினரிலும் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பங்கேற்றனர்.