இணைய வழியில் 50,000 இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமானது, அமெரிக்க நிறுவனமான கோர்ஸரா நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பற்ற 50,000 நபர்களுக்கு இணைய வழியில் 11 பிரிவுகளில் 4000த்திற்கும் மேற்பட்ட வகையிலான பாடங்களில் இலவசமாக குறுகிய கால பயிற்சி அளித்திடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோர்ஸ் நிறுவனம் 80 நாடுகளில் உலகத்தரம் வாய்ந்த திறன்களை வளர்க்கும் இலவச பயிற்சி வகுப்புகளை இணையம் வழியாக நடத்தி வருகிறது. மேலும் இந்நிறுவனம் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கூகுள், ஐபிஎம் மற்றும் பிற அரசு நிறுவனங்களுடன் இணைந்து பொறியியல், இயந்திர கற்றல் கணிதம், வணிகம், கணினி அறிவியல், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், மருத்துவம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்களில் இணைய வழியில் வகுப்புகளை நடத்தி சான்றிதழ் படிப்புகள் மற்றும் பட்டப் படிப்புகளை வழங்குகிறது. உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் உள்ள பயிற்றுநர்களைக் கொண்டு தரமான பாட குறிப்புகள் மற்றும் காணொளி பாடத் தொகுப்புகளுடன் பயிற்றுவிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்தவுடன் இணையம் வழியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வேலைவாய்ப்பும் அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியை பெற விரும்புவார்கள் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும், 18 வயது பூர்த்தியானவராகவும், வேலைவாய்ப்பற்றவராகவும் இருத்தல் வேண்டும். மேலும், இப்பயிற்சியை பெற ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் 31.10.2020க்குள் tnskill.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.