106 அடி உயர கம்பத்தில் பறக்க விடப்பட்ட அதிமுக கொடி

கோவை நீலாம்பூரில் அதிமுகவின் 49 வது ஆண்டையொட்டி 106 அடி உயர கம்பத்தில் அக்கட்சியின் கொடியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்றி வைத்தார்.

அதிமுக தொடங்கப்பட்டு 49 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழகம் முழுவதும் அக்கட்சியினர்  கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் நேற்று அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். இதைபோல்  கோவையிலும் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிலையில் கோவை மாநகரின் நுழைவு வாயிலான நீலம்பூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 106 அடி கம்பத்தில் அதிமுகவின் கொடியை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஏற்றி வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட திரளான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் 50 வருடங்களில் இல்லாத அளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.  தற்போது பல்வேறு நலத்திட்ட பணிகள் முதல்வரால் வழங்கப்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக கோவை மாவட்டத்தில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. பாலங்கள் அதிக அளவில் கட்டப்பட்டுள்ளது, கூட்டு குடியிருப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளது, அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக பல்வேறு கருவிகள் 25 கோடி ரூபாய்க்கு மேற்பட்டு வாங்கப்பட்டுள்ளது. மேலும், ஆனைமலையாறு நல்லாறு திட்டம் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி செயல்படுத்தும் நிலையில் உள்ளது. இதன் மூலம் இந்த அரசு மக்களிடம் நன்மதிப்பை பெற்று உள்ளது. வருகின்ற 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியை அமைக்கும் என தெரிவித்தார்.