மருத்துவத் துறையின் புதிய பரிணாமம் டெலிமெடிசன்

டாக்டர் ஆதித்யன் குகன்,  பொதுமருத்துவ நிபுணர், டாக்டர் ஏஜிஎஸ் கிளினிக்

எப்போதும் அவசரமும், ஆர்ப்பாட்டமும் நிறைந்த மக்கள் கூட்டம் கடந்த அரை ஆண்டுகளுக்கு மேல் தங்களது வீடுகளில் கொரோனாவுக்கு பயந்து முடங்கி அமைதியாக இருந்து வந்தனர். தற்போதைய ஊரடங்குத் தளர்வுக்கு பிறகும் பெருந்தொற்று காரணமாக பலரும் பொதுஇடங்களுக்கு அச்சத்துடன்தான் சென்று வருகின்றனர்.

இந்த காலங்களில் ஏற்படும் உடல் ரீதியான பிரச்னைகளை சரிசெய்ய மருத்துவமனைக்கு செல்வதை பலர் தவிர்த்தும், அதிலும் சிலர் சுயமருத்துவம் மேற்கொண்டும் வருகின்றனர். இது ஒரு சிலருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

இதற்கு மாற்றாகவும், மருத்துவத் துறையின் வளர்ச்சியாகவும் டெலிமெடிஷன் என்ற ஒன்றின் மூலம் மருத்துவ சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் துறையில் கோவையில் சிறப்பாக செயல்பட்டுவரும் டாக்டர் ஏஜிஎஸ் கிளினிக் மருத்துவர் ஆதித்யன் குகன் அவர்களிடம் நாம் மேற்கொண்ட சிறப்பு நேர்காணலில் கொரோனா தொடர்பான கேள்விகளும் அதற்கான அவரது பிரத்யேக பதில்களும் ‘தி கோவை மெயில்’ வாசகர்களான உங்களுக்காக…

ஊரடங்கில் காலத்தில் நோய்கள் குறைந்துள்ளதா? அதிகரித்துள்ளதா?

என்னைப் பொருத்தவரை ஊரடங்கு காலத்தில் நோய்கள் அதிகரித்துள்ளன. காரணம், ஊரடங்கு மக்களுக்கு பொருளாதார ரீதியிலும், மனதளவிலும் பெரும் பாதிப்பைக் கொடுத்துள்ளது. மேலும், உடல் உழைப்பு என்பது அதிக அளவில் குறைந்துள்ளது. இதனால் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தின் அளவு மாற்றம் அடைந்து நோய்கள் அதிகரித்துள்ளன.

கொரோனா காலத்தில் மருத்துவமனை செல்ல பயப்படுவர்களுக்கான அறிவுரை?

தற்போது மருத்துவமனை செல்வதற்கான அவசியம் நோயின் தீவிரத் தன்மையைப் பொறுத்தே உள்ளது. அப்படிப்பட்டவர்கள் நிச்சயம் மருத்துவமனை செல்வது அவசியம். மற்றவர்களுக்கு அதாவது, நோய் அறிகுறி இல்லாதவர்கள், ரெகுலர் மெடிக்கல் செக்அப் செய்பவர்கள் போன்றவர்களுக்கு டெலிமெடிசன் மூலம் சிகிச்சை வழங்கமுடியும். இதை இந்தியாவில் இந்தபெருந்தொற்று காலத்திற்கு பிறகுதான் பலரும் அறிந்துள்ளனர். இதன் மூலம் நோயாளிகளைக் கூடுதலாகக் கண்காணிக்க முடிகிறது.

டெலிமெடிசன் சேவையைப் பயன்படுத்த தொழில்நுட்பம் ஒரு தடையா?

இன்றைக்கு அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. இது பொதுமருத்துவத்திற்கு போதுமானதுதான். இருப்பினும் சில சூழ்நிலைகளில் அதாவது , கொரோனா தொற்றாளர்கள், ஆஸ்துமா உள்ளவர்கள் போன்றவர்களை ஃப்ளுடூத் ஸ்டெதஸ்கோப் மூலம் கண்காணிக்க வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் அதுவும் பெரிய அளவில் செலவுகளை அளிக்காது.

எல்லாபிரச்னைக்கும் டெலிமெடிசன் மூலம் சிகிச்சை பெற முடியுமா?

பொதுவாக,நோய் தொடர்பான அனைத்து சிகிச்சைகளுக்கும் டெலிமெடிஷன் மூலம் வழங்கமுடியாது. இருப்பினும், முழு உடல் பரிசோதனை, காய்ச்சல் போன்ற பல நோய்களுக்கு டெலிமெடிசன் மூலம் சிகிச்சை வழங்கமுடியும். அதுவும் அதன் தீவிரத்தைப் பொருத்துத்தான் சிகிச்சை வழங்க முடியும். நோய் தீவிரம் அடைந்தால் மருத்துவமனை செல்வது அவசியம்.

உங்களது கிளினிக் மூலம் என்னென்ன பிரச்னைக்கு தீர்வு வழங்குகிறீர்?

இந்த ஊரடங்கு காலத்தில்தான் நான் டெலிமெடிசன் சேவை ஆரம்பித்தேன். ஏனென்றால் அப்பொழுது அறிகுறி இல்லாத தொற்றாளர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு ஃபெபிஃப்ளு என்ற வைரஸ் மாத்திரை வழங்கவேண்டி இருந்தது. அவர்களைக் கண்காணிப்பது, 14 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவர்களை பரிசோதிப்பது போன்றவற்றை செய்து வந்தோம்.

அந்த சூழ்நிலையில் எனது நண்பரின் தந்தைக்கு மருத்துவமனை செல்லமுடியாத சூழ்நிலையில் வீட்டிலேயே ஐசியு போன்ற அமைப்பை உருவாக்கி 20 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு அவர் தற்பொழுது முழுவதும் குணமடைந்து நலமாக உள்ளார். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைத்துமே சாத்தியம், ஆனால் அதுஒரு குறிப்பிட்ட எல்லை வரை.

டெலிமெடிசன் மூலம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சிகிச்சை வழங்க முடியுமா?

அனைவரிடமும் ஸ்மார்ட்போன் இருக்கின்ற இந்த சூழ்நிலையில் டெலிமெடிசன் மூலம் எளிதில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சிகிச்சை வழங்க முடியும். வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக செயலிகள் மூலமும் மருத்துவரை அணுகமுடியும். மேலும், ஒரு சில செயலிகளின் மூலமும் மருத்துவரின் ஆலோசனை பெறுவது போன்றவற்றை எளிதில் பெற முடியும். இதனால் டெலிமெடிஷன் அனைத்துத் தரப்பு மக்களும் பெறக்கூடிய ஒன்றுதான்.

மருத்துவப் பயனாளிகளின் கருத்து?

திருப்பூரில் இருந்து 5 கொரோனா தொற்றாளர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு எனது வழிகாட்டலில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் தற்பொழுது முற்றிலும் குணமடைந்துள்ளனர். வீட்டில் இருந்தே இந்த நோயிலிருந்து குணமைடந்ததால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்தனர். நாங்களும் மகிழ்ச்சி அடைந்தோம்.

கொரோனா காலத்திற்கான உங்களின் சிறப்பு கருத்து?

எல்லா நோய்களுக்கும்மருத்துவமனை செல்லவேண்டிய அவசியம் இல்லை. சிறு சிறு பிரச்னைகளுக்கு டெலிமெடிசன் மூலமே சிகிச்சை வழங்க முடியும். இதன் மூலம் நோய் தொற்று ஏற்படும் அபாயம் குறைகிறது, போக்குவரத்து செலவுகள் குறைகிறது. வயதானோர், குழந்தைகள், கர்ப்பிணிகள் போன்றவர்களின் உடல் நலத்தைக் கண்காணிக்க டெலிமெடிஷன் சிறப்பானதாக உள்ளது.

அதேபோல்,எல்லாவற்றிற்கும் மருத்துவமனை செல்லவேண்டுமா என்பதும், டெலிமெடிஷனே போதுமானதா என்பதும்அந்தந்த சூழ்நிலையைப் பொருத்து முடிவெடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு என்னால் சொல்லக்கூடிய தகவல், இதுபோன்ற மருத்துவ சேவை முறை குறித்து உங்கள் சுற்றுவட்டார நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்குத் தெரியப்படுத்தி அவர்கள் பயன்பெற உதவுங்கள் என்பதே. காலத்திற்கேற்ப உருவாகும் மாற்றங்களைப் புரிந்து, தெளிந்து செயல்படுவது அனைவருக்கும் நல்லது.