கேஎம்சிஎச் கோவிட் தொற்றுக்குப் பிந்தைய நுரையீரல் மறுசீரமைப்பு மையம்

கோவிட் தொற்றுக்குப் பிந்தைய நுரையீரல் மறுசீரமைப்பு மையமும், நுரையீரல் மறுசீரமைப்புக்கான பிரத்யேக வார்டையும் கேஎம்சிஎச் திறந்திருப்பதாக அறிவித்துள்ளது. நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் தீவிர நுரையீரல் நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளும் குழுவின் செயலாற்றலை கோவிட் தொற்றுக்குப் பிந்தைய சிக்கல்களைத் தீர்க்க கேஎம்சிஎச் பயன்படுத்தப்போகிறது.

கோவிட் தொற்றுக்குப் பின் ஏற்படும் தொடர் சுவாச சிக்கல்கள் கொண்ட நோயாளிகளுக்கானது இந்த மையமும் வார்டும். மருத்துவமனையில் 3 வார காலம் சிகிச்சை பெற்று கோவிட் தொற்று நெகடிவ் ஆக இருந்தபோதிலும், சிலர் மூச்சுத்திணறல், ஆக்ஸிஜன் செலுத்த வேண்டிய சிக்கல்களுக்காக மருத்துவமனையிலேயே இருக்கிறார்கள்.

கோவிட்-19 தொற்று ஏற்பட்டவர்களில் 80% பேருக்கு லேசான உபாதை உள்ளது; 15-20% பேருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு மிதமானது முதல் கடினமான அளவுக்கு உபாதை இருக்கிறது; 50-80% நோயாளிகளுக்கு கோவிட்-19 தொற்றிலிருந்து விடுபட்ட பின்னரும் சில வாரங்கள், மாதங்கள் இருமல், சோர்வு, உடல்வலி, மூட்டுவலி, களைப்பு போன்ற அறிகுறிகள் தொடர்வது ஆச்சரியமளிக்கிறது. இவ்வாறு தொடரும் அறிகுறிகளைக் குறிக்க“நீண்ட கோவிட்”என்ற பதத்தை ஆராய்ச்சியாளர்களும் நோயாளிகளும் பயன்படுத்துகிறார்கள்.

அதிர்ஷ்டவசமாக, கோவிட் நிமோனியாவைத் தொடர்ந்து நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் நேர்வது மிகவும் அரிது; ஆனால், 65 வயதைக் கடந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் தீவிர நிமோனியா நோயாளிகளுக்கு, சுவாசக் கருவி உதவித் தேவையும், சத்துக் குறைபாடும் ஆபத்தானவை.

தீவிர பாதிப்புள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கு சுவாசக் கருவிப் பயன்பாடு, நீண்டநாள் அசைவின்றி இருத்தல் ஆகியவற்றின் விளைவாக மறுசீரமைப்புச் சிகிச்சை அவசியம். அவர்களுக்கு கீழ்க்கண்ட சிக்கல்கள் இருக்கும்:

  • நுரையீரல் செயல்பாட்டில் குறைபாடு
  • உடல்நிலை செயலிழப்பும், தசை பலவீனமும்
  • நினைவுப் பிறழல், அறிதிறன் குறைபாடு
  • விழுங்குவதிலும், பேசுவதிலும் சிரமம்
  • மனநிலைக் கோளாறு, மனநல உதவி தேவைப்படும் நிலை

பல்துறை மருத்துவக் குழுவின் மறுசீரமைப்பு சிகிச்சை, தீவிர கோவிட் தொற்று நோயாளிகளை, தங்களது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுமளவுக்கு இயல்பான அல்லது கிட்டத்தட்ட இயல்பான நிலைக்குக் கொண்டுவர உதவும்.

கேஎம்சிஎச் இந்தச் சேவையைக் கீழ்க்கண்டவர்களுக்கு வழங்கும்:

மிதமானது முதல் கடுமையான பாதிப்புக்குள்ளான கோவிட் நோயாளிகளில் (கோவிட்-டுக்கான முதல் சோதனை நடந்து 4 வாரங்கள் கடந்தவர்களும், சமீபமாக கோவிட் சோதனையில் நெகடிவ் முடிவு வந்தவர்களும்):

  1. அவசர நிலையைக் கடந்தும் தொடர்ந்து ஆக்சிஜனும், சுவாசக் கருவி உதவியும் தேவைப்படுபவர்கள்.
  2. அன்றாட அலுவல்களைச் செய்ய இயலாமல் தொடர்ந்து மூச்சுத்திணறல் உள்ளவர்கள்.

மேற்கண்ட அறிகுறிகள் தென்படுமானால் நோயாளிகள் எங்களது மருத்துவக் குழுவை அணுகலாம். முதல்கட்டமாக தொலைபேசியில் உரையாடியபின், அவர்கள் மையத்திற்கு நேரில் வர கேட்டுக்கொள்ளப்படுவர். அவர்கள் மையத்திற்கு வந்தவுடன், முதலாவதாக அவர்களது தகுதி, நிலைத்தன்மை, மாறுபட்ட அறிகுறிகள் ஆகியவற்றை அறிய மருத்துவ மதிப்பீடு செய்யப்படும். அதன் அடிப்படையில் மறுசீரமைப்புச் சிகிச்சைக்காக வெளிநோயாளியாகவோ, அல்லது உள்நோயாளியாகவோ இருக்க அவர்கள் விருப்பம் தெரிவிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு: +91 93449 14737 / +91 97906 90153 (காலை 9 முதல் மாலை 4 மணி வரை)