கோவையில் 33 ஆயிரத்தை கடந்த குணமடைந்தோரின் எண்ணிக்கை

கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக குறைந்து வரும் நிலையில் இன்று 389 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலில் கோவை ராமநாதபுரம், பீளமேடு, சிங்காநல்லூர், காந்திபுரம், உக்கடம், ரத்தினபுரி, வெள்ளக்கிணர், சரவணம்பட்டி, துடியலூர், சுந்தராபுரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, சூலூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 389 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 315 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் கோவையில் 5 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 452 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய்த் தொற்றில் இருந்து 33 ஆயிரத்து 105 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 703 பேர் சிகிச்சையில் உள்ளனர்.