சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்

பெண்கள் அனைவரும் ஒன்று தான். ஆனால் அதிலும் நகரப்புற, கிராமப்புற மக்களுக்கிடையே வித்தியாசங்கள் பல உள்ளன.

கிராமப்புறத்தின் அடையாளமாக இருக்கும் வேளாண்மையில் பெண்களின் பங்கு அளப்பரியது. ஆனால், நாள்தோறும் அதிக பணிச்சுமைக்கு மத்தியில் அவர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து அக்டோபர் 15-ம் நாள் சர்வதேச கிராமப்புற தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

2020ல் நம்மிடம் இல்லாத தொழில் நுட்பம் என்று எதுவும் இல்லை. அதிலும் பெண்கள் கால் தடம் பதியாமல் இல்லை. மேலும் கல்வி, விளையாட்டு, தொழில் என ஏராளமான துறையில் பெண்கள் இன்று சாதனை புரிந்து வருகின்றனர். இதிலும் சொற்ப அளவிலேயே பெண்கள் சாதித்துள்ளனர்.

இன்னும் கிராமப்புற பெண்களில் பலர் தற்பொழுதும் வெளியுலகம் தெரியாதவர்களாக தான் இருக்கிறார்கள். அதேபோல் நகர்ப்புற பெண்களுக்குக் கிடைக்கும் வசதி கிராமப்புற பெண்களுக்கு கிடைப்பதில்லை.

சுகாதாரம், போக்குவரத்து வசதிகளில் நகர்புறத்தைக் காட்டிலும் கிராமங்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது. குடிக்க நீரின்றி பல மைல்கள் நாள்தோறும் கால்கடுக்க நடந்து நீர் இறைத்துவரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவின் கிராமங்களில் அதிகரித்து கொண்டிருக்கிறது.

உலக அளவில் எதிரொலிக்கும் பருவநிலை மாற்றத்தையும், புவி வெப்பமடைவதையும் கட்டுப்படுத்துவதற்கு கிராமப்புறங்கள் மீதும் சுற்றுச்சூழல் மீதும் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு முதல் கட்டமாக உலகம் முழுவதும் வறுமையில் சிக்கிக் கொண்டிருக்கும் கிராமப்புற பெண்களின் நிலையை மாற்ற வேண்டும்.

இன்றும் பல கிராமப்புற பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிக்கொண்டு தான் இருக்கின்றனர். நகர்புறத்தில் ஒரு சில பகுதி மக்கள் இன்னும் வறுமையிலிருந்து மீளாமல் உள்ள நிலையில், கிராமப்புற பெண்களின் நிலைமை இதிலும் மோசமாக உள்ளது. இவர்களது நிலை மாற்றப்பட வேண்டும்.

அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் 15-ம் நாள் சர்வதேச கிராமப்புற பெண்கள் தினமாக கொண்டப்படுகிறது.

தகவல் : தி இந்து தமிழ் திசை