இணையவழியில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வரும் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை துறை அலுவலர்களைக் கொண்டு இணையவழியில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறவுள்ளது என  மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்கென அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கடந்த சில மாதங்களாக விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது. தற்சமயம் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், இதுகுறித்த விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து  இணையவழியில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வரும் வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை துறை அலுவலர்களைக் கொண்டு இணையவழியில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. கோவை மாவட்ட விவசாயிகள் விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கைகளை இணைய வழியாக தெரிவித்து தீர்வு காணும் வகையில் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் அந்தந்தப் பகுதியிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு 16.10.2020 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் சென்று பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி விவசாயிகள் கீழ்க்காணும் நடைமுறைகளை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும்.

  1. வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகள் அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
  2. முக்கியமான பிரச்சினைகளை மாத்திரம், சுருக்கமாக ஆட்சித்தலைவரிடம் தெரிவிக்க வேண்டும். இதர பிரச்சனைகளை விண்ணப்பங்களாக வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலமாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பலாம்.
  3. கலந்து கொள்ளும் விவசாயிகள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் (மாஸ்க்) அணிந்து வரவேண்டும்.
  4. வேளாண்மை விhpவாக்க மையத்தில் நுழையும் போது அங்கே வைக்கப்பட்டுள்ள நோய் தொற்று கிருமிநாசினியை (சானிடைசர்) கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்பு தான் உள்ளே வரவேண்டும்.
  5. இணையவழி குறைதீர்ப்பு கூட்டத்தின் போது விவசாயிகள் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும்.
  6. பதிவின் அடிப்படையில் ஒவ்வொரு விவசாய பிரதிநிதிக்கும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மூலம் குறைகளை கோரிக்கைகளைத் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்படும். மற்றவர்கள் சமூக இடைவெளியுடன் தங்களது முறை வரும் வரை அமைதி காத்திட வேண்டும்.

இணையவழியில் நடைபெறும் இந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு சம்மந்தப்பட்ட துறைகளின் தலைமை அலுவலர் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

கோவை மாவட்ட விவசாயிகள் இந்த இணையவழி விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தை முறையாக பயன்படுத்தி, மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து தங்களது விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தக்க தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.