கே.சி.கருணாகரன் மறைவு – மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்க முடிவு

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் கே.சி.கருணாகரன் மறைவையடுத்து கோவை மாவட்டத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்க சிபிஎம் கோவை மாவட்டக்குழு முடிவெடுத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினரும், கட்சியின் கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், சிங்காநல்லூர் சட்ட பேரவை முன்னாள் உறுப்பினருமான கே.சி.கருணாகரன் வெள்ளியன்று இரவு காலமானார்.

உப்பிலிபாளையத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் இல்லத்தில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்திய பின்னர், மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது.

இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மதிமுக நிர்வாகி தேவசேனாதிபதி, சிஐடியு மாவட்ட தலைவர்கள் பத்மநாபன், கிருஷ்ணமூர்த்தி, வேலுசாமி, மூத்த தோழர்கள் வெள்ளிங்கிரி, தாமோதரன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் காமராஜ், பத்ரி, சிபிஎம் திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், கண்ணன், ராதிகா, தீக்கதிர் கோவை பதிப்பு மேலாளர் மாணிக்கம், பொறுப்பாசிரியர் ராஜா மற்றும் ஊழியர்கள் மற்றும் சர்வ கட்சி தலைவர்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள், தொழிற்சங்க தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கே.சி.கருணாகரன் மறைவையொட்டி கோவை மாவட்டத்தில் மூன்று நாட்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கொடியை அரை கம்பத்தில் இறக்குவது என்றும், கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் மூன்று நாட்கள் ஒத்திவைப்பது என கோவை மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.