திடக்கழிவு மேலாண்மை மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்து மண்டல அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது, கோவை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் உள்ள அனைத்து தெருக்களிலும் தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை சேகரித்து தள்ளுவண்டி மற்றும் வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு கனரக வாகனங்கள் மூலம் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு சென்று அங்கு தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பைகள் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தூய்மைப் பணியாளர்கள் வீடுகள் தோறும் குப்பைகள் பெறப்படும்போது மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தனித்தனியே பெறப்பட வேண்டும். மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்லும் கால்வாய்களை தூய்மைப்படுத்திட வேண்டும். சாலைகளை தூய்மைப்படுத்த வேண்டும். வீடுகளில் நீர் தேங்கா வண்ணம் பாதுகாத்து கொசுக்கள் உற்பத்தியாவதை தடுத்திட வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் மூலம் கொசு மருந்துகள் தெளிக்கப்பட வேண்டும்.

இறைச்சி மற்றும் கோழிக்கழிவுகளை தனியாக சேகரிக்கவும், குப்பைகளை சாலைகளில் கொட்ட வேண்டாம் என அவ்விடங்களில் விளம்பர பலகைகள் வைக்க வேண்டும். உணவகங்கள் குப்பைகளை சாலைகளில் கொட்ட வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும். பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். குடிநீர் இணைப்பு பெற அனுமதி இல்லாமல் நிலத்தை தோண்டக் கூடாது.

பழுதடைந்த கட்டிடங்களை கண்டறிந்து அவற்றிற்கு நோட்டீஸ் வழங்க வேண்டும். கூடுதலாக கட்டப்பட்டு வரும் குடிநீர் தொட்டிகளின் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். தூய்மையான மாநகராட்சியாக திகழ பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, மாநகரப்பொறியாளர் லட்சுமணன், மண்டல உதவி ஆணையர்கள் செந்தல்குமார் ரத்தினம் (வடக்கு), ரவி (தெற்கு), செந்தில்அரசன் (மேற்கு), முருகன்(கிழக்கு), செயற்பொறியாளர் ஞானவேல், உதவி நிர்வாக பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், அனைத்து மண்டல சுகாதார அலுவலர்கள், மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.