ஓட்டுநர், நடத்துநர் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, மாநகரப்பொறியாளர் லட்சுமணன், மண்டல உதவி ஆணையர்கள் செந்தல்குமார் ரத்தினம் (வடக்கு), ரவி (தெற்கு), செந்தில்அரசன் (மேற்கு), முருகன்(கிழக்கு), செயற்பொறியாளர் ஞானவேல், உதவி நிர்வாக பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், அனைத்து மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பேசுகையில், ஒரு வார்டில் மருத்துவ முகாம் நடைபெறும்போது ஒரு வாரம் கழித்து மீண்டும் அதே இடத்தில் மருத்துவ முகாம் நடைபெற வேண்டும். அப்பகுதியில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் விபரங்களை சேகரிக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், மார்க்கெட், வெளியூர் செல்லும் பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற வேண்டும்.

பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர், பயணிகள் என அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இவற்றை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். உணவகங்கள், வணிக வளாகங்கள், பேக்கரிகள், மளிகைக்கடைகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும். மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்திட வேண்டும். புதிதாக சிறைக்கு உள்ளே வரும் கைதிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.