கூட்டணி விசயங்கள் ஜனவரிக்கு பின்பே உறுதியாகும்

பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன்

கூட்டணி விசயங்கள் எல்லாம் ஜனவரிக்கு பின்பே உறுதியாகும் என பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட வேல் ஓவிய போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கிய பின்னர் அக்கட்சியின் துணைத் தலைவர் வானதிசீனிவாசன் பேசுகையில், பாஜக ஏற்கனவே திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருக்கின்றது எனவும் தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் மாறுவது என்பது வழக்கமானது எனவும் இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையில் வலுவாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

மேலும், அரசியலில் வருங்காலத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை சொல்ல முடியாது, அதைதான் பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருப்பதாகவும் கூறினார். பாராளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி  இப்போது வரை தொடர்கின்றது, கூட்டணியில் எந்த மாறுபட்ட கருத்தும்  இல்லை, வரக்கூடிய காலத்தை காலம்தான் முடிவு செய்யும் எனவும், இன்றைய தேதியில் எந்த மாற்றமும் கிடையாது எனவும் தெரிவித்தார்.

புதியதாக கட்சி ஆரம்பிக்கப் போகின்றவர்கள், புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் இருக்கின்றனர் அவர்களுடன் கூட்டணி வரலாம் என கூறிய அவர் அரசியல் பரபரப்பிற்காக பொன்ராதாகிருஷ்ணன் எதுவும் சொல்லவில்லை எனவும் தெரிவித்தார்.

கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் முடிவு செய்யப்பட வேண்டியது என கூறிய அவர், அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை, அதே வேளையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டாரா என்பதை எங்களின் தேசிய தலைமை சொல்ல வேண்டும் என தெரிவித்தார். தேசிய தலைமை கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கின்றோம், எங்களின் கட்சியின் தலைமை இது குறித்து முடிவெடுக்கும் என தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளர் என அதிமுக கட்சியில் முடிவெடுத்து இருக்கின்றனர், அந்த கட்சியின் முடிவு குறித்து எங்கள் தேசிய கட்சியின் தலைவர்கள் கலந்து பேசி தேர்தல் நேரத்தில் முடிவெடுப்பார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் பாஜக தலைமையில் கூட கூட்டணி அமையலாம் எனவும், கூட்டணி விசயங்கள் எல்லாம் ஜனவரிக்கு பின்பே உறுதியாகும் எனவும் பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.