தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிப்பது தொடர்பாக தொழில்நிறுவனங்கள் உரிமையாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், தமிழக அரசின் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதலின்படி, கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தொழில்நிறுவனங்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், அனைத்து தொழில்நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டு வருகின்றன. அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.தொழில்நிறுவனங்களில் பணிக்கு வரும் பணியாளர்களுக்கு  தினந்தோறும் தெர்மல் ஸ்கேனிங் செய்ய வேண்டும். பெரிய தொழில்சாலைகளில் சற்று கூடுதலான தெர்மல் ஸ்கேனிங் கருவிகளையும், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களையும், தொழிலாளர்கள் வருகைபதிவேடுகளை பயன்படுத்தவேண்டும். சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்து, கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

தொழிற் நிறுவனங்கள் நுழைவாயிலில் கைகள் சுத்தப்படுத்துவதற்கு சோப்பு ஆயில் மற்றும் கை கழுவும் திரவம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். வாகன நிறுத்துமிடங்களில் கூட்டநெரிசலையும், சமூக இடைவெளியையும் நடைமுறைபடுத்துவது உறுதி செய்யவேண்டும். மேலும் ஊழியர்கள் மற்றும் பொருட்கள் கொண்டு செல்வதற்கும் தனித்தனியாக வழிகள்  இருக்கவேண்டும். மேலும், தொழில்நிறுவனங்களில் பயன்படுத்திய முகக்கவசங்கள், கையுறைகள், போன்றவற்றை உரிய முறையில் அப்புறப்படுத்தவேண்டும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயற்படும் தொழில் நிறுவனங்களில் அதிகளவில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வந்தனர். தற்போது பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதால் பிற மாநிலத்திலிருந்து தொழிலாளர்கள் கோவை மாவட்டத்திற்கு வருகை தருகின்றார்கள். இவ்வாறு பிற மாநிலத்திலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். மேலும் 7 முதல் 10 நாட்கள் தனிமைபடுத்துதலுக்கு பின்னரே பணி செய்ய அனுமதிக்க வேண்டும்.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை பின்பற்றியும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தியும், பணியாளர்கள், மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை  தீவிரமாக கடைபிடிப்பதையும் உறுதி செய்திட வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணிதெரிவித்தார்.