மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு வேண்டுகோள்

தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் மெக்ரிக்கர் சாலையில் தூய்மைப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று மக்கும், மக்கா குப்பைகளை சேகரித்து வாகனங்கள் மூலம் கொண்டு செல்லும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் அப்பகுதியில் உள்ளவர்களிடம் தூய்மைப் பணியாளர்களிடம் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தனித்தனியாக பிரித்து சேகரித்து வழங்கும்படியும், குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும், சாலை ஓரங்களில் கொட்டக்கூடாது என அப்பகுதியில் உள்ளவர்களிடம் தெரிவித்த ஆணையாளர், ஆர்.எஸ்.புரம் ஆரோக்கியசாமி சாலையில் மக்கும் கழிவுகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மையத்தை பார்வையிட்ட பின்னர், அம்மையம் செயல்படுவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்திட வேண்டுமென தொடர்புடைய அலுவலர்களுக்கு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் ஸ்ரீனிவாச ராகவன் வீதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வரும் பணிகளையும், அப்பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு அப்பகுதியில் உள்ளவர்களிடம் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தெரிவித்து, ஆர்.எஸ்.புரத்தில் கொரோனா பரவுதலின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நவீன மயமாக்கப்பட்ட காந்தி பூங்காவை பார்வையிட்டு அப்பூங்காவைச் சுற்றி மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

இவ்வாய்வின்போது மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில்அரசன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், பணிமேற்பார்வையாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தார்கள்.