மாணவர்களை தொழிலதிபர்களாக மாற்ற முயற்சிக்கும் சுகுணா கல்லூரி குழுமம்

மாணவர்களை தொழில்முனைவோர்களாகவும், தொழிலதிபர்களாகவும் மாற்றுவதன் முயற்சியாக கோவை சுகுணா கல்லூரி குழுமங்கள் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளது என்று  கல்லூரியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சூழலில், கலை மற்றும் அறிவியல் உட்பட பல்வேறு துறை சார்ந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் வேலைவாய்ப்பை பெறுவதில் தங்களது திறனை இழந்து வருகின்றனர். இந்நிலையில் இது போன்ற மாணவ,மாணவிகளின் குறைகளை போக்கும் வகையில், தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா கலை அறிவியல் கல்லூரியில் துவங்கப்பட்டுள்ளது.

இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் கல்லூரியின் தலைவர் லஷ்மி நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீகாந்த், சேகர், திறனறிவு பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் வைத்தியநாதன் ஆகியோர் பேசுகையில், கல்லூரி மாணவர்களுக்கென்று துவங்கப்பட்டுள்ள இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் பல்துறை வல்லுநர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு அனைத்து விதமான வாழ்வியல், தொழில் துறை சார்ந்த பிரச்னைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று பல்வேறு துறை சார்ந்த மற்றும் தொழில் சார்ந்தவர்கள் நேரடியாக பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். இதனால் கல்வி மற்றும் தேர்வுகள் மட்டுமின்றி எதிர் காலங்களில் எந்த விதமான தொழில் சார்ந்த மற்றும் சாராத அனைத்து விதமான பிரச்னைகளையும் எதிர் கொள்ளும் வகையில் மாணவர்கள் தயார் செய்யப்படுவதாக தெரிவித்தனர். மேலும், விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையுடன் கூடிய திறன் பயிற்சி வகுப்புகள் கல்வி ஆண்டு முழுவதும் தொடர வசதி ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.