கே.பி.ஆர் கலை கல்லூரி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மேலாண்மைத் துறையும் கே.பி.ஆர் ஐஏஎஸ் அகாடமியும் இணைந்து நடத்திய மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி இணையவழியில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் பாலுசாமி தலைமை தாங்கிய நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சௌமிய ஐஏஎஸ், கிருத்திகா ஐஎஃப்எஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் சௌமியா ஐஏஎஸ் பேசுகையில், UPS தேர்வுகளுக்கும் மற்ற அரசுத் தேர்வுகளுக்கும் மாணவர்கள் மற்றும் இன்றைய  இளம் தலைமுறையினர்கள் திட்டமிட்டுக் கால அட்டவணையின் மூலம் பயிற்சி செய்தால், தேர்வில் வெற்றி என்பது உறுதி என்று எடுத்துரைத்தார்.

எப்பொழுது எதற்கு முக்கியத்துவம் தரவேண்டுமோ, அதற்குரிய முக்கியத்துவத்தைக் கொடுத்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். அதற்கு, மிகமுக்கியமானது நேர மேலாண்மை ஆகும் என்று கூறி மாணவர்களிடையே கலந்துரையாடலின் மூலம் எழுந்த வினாக்களுக்கு விடையளித்தார். தேர்வுக்கு மட்டுமின்றித் திட்டமிடல் என்பது வாழ்விற்கும் இன்றியமையாதது என கூறினார்.

இவரை தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் கிருத்திகா ஐஎஃப்எஸ், ஒரு இலக்கை எட்ட வேண்டுமானால் அதற்கு இடைவிடாத திட்டமிடல், செயல்திறன் மற்றும் பயிற்சி ஆகியன மிக அவசியம் என்பதை உணர்த்தினார். உரிய காலத்தில் உரிய நேரத்தில் செய்து முடிக்கும் ஒவ்வொரு செயலும் வெற்றி அடையும் என்று கூறி, நிகழ்வின் நிறைவாக மாணவர்கள் இடையே கலந்துரையாடல் மூலம் எழுந்த வினாக்களுக்கு விடை தந்து சிறப்பித்தார்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் இணைப்பேராசிரியர் வனிதா வரவேற்புரை வழங்கினார். உதவிப்பேராசிரியர் வாசுகிராஜேந்திரன் நன்றியுரை கூறினார். நிகழ்வின் ஏற்பாட்டை மேலாண்மைத்துறை இணைப்பேராசிரியர் ஹேமலதா செய்திருந்தார். நிகழ்வில் முதன்மையர்கள், பேராசிரியர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள் என 410-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.