ஏழை குழந்தைகளுக்காக வீட்டிலேயே வகுப்பறை உருவாக்கிய ஏழை பள்ளி மாணவி

கல்வி ஒரு மனிதனுக்கு மிகமுக்கியம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதுவும் ஒரு பெண்ணின் கல்வி அந்த தனி மனிதரை மட்டுமல்லாமல் அவர் குடும்பத்தோடு, அந்த நாட்டையும் வளர செய்யும்.

கல்வி ஆடம்பரமாக கருவியாக மாறியுள்ள இந்த சூழலில் கல்வி ஒன்றே சொத்து என கொண்டு பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்றுகொண்டிருக்கும் பலர் இங்கு இருக்கின்றனர். நகரவாசிகளுக்கே இது பொருளாதார ரீதியில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அப்படி இருக்கையில் பழங்குடியினர்களுக்கு இது மேலும் சிரமத்தை தான் அளிக்கிறது.

தமிழகம் – கேரள எல்லையில் உள்ள அட்டப்பாடி பழங்குடியினர் மலை கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு மின்சாரம், சாலை வசதி உள்ளிட்டவைகள் இல்லை.

செல்போன், டி.வி. இல்லாததால் கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பில் இங்குள்ள மாணவர்களால் கல்வி கற்க முடியாமல் அவதியடைந்தனர்.

இதே பகுதியில் உள்ள சோலையூரை சேர்ந்த கூலித்தொழிலாளி சுதிர் மற்றும் சஜி இவர்களின் மூத்த மகள் அனாமிகா (வயது 14). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கில் விடுதியில் தங்கியிருந்த அனாமிகா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் சொந்த ஊருக்கு வந்தார். இங்கு மின்சாரம் மற்றும் ஸ்மார்ட்போன் இல்லாததால் அனாமிகா ஆன்லைனில் பாடம் கற்கமுடியாமல் சிரமம் அடைந்தார்.

இதே நிலை நீடித்தால் கல்வியை இழக்க வேண்டும் என்று பயந்த அனாமிகா தனது தந்தையின் உதவியோடு கூரைகளால் ஒரு வகுப்பறையை உருவாக்கினார். தன்னை போலவே ஆன்லைனில் பாடம் கற்கமுடியாத மாணவர்களை வீடுவீடாக தேடிச்சென்று தான் உருவாக்கிய வகுப்பறைக்கு பாடம் படிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

அதன்படி அந்த கிராமத்தில் படித்து வரும் 10 மாணவ, மாணவிகள் படிக்க முன் வந்தனர். மாணவி அனாமிகாவுக்கு அவரது பள்ளியில் தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஜெர்மனி ஆகிய 4 மொழிகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

அதனை இங்குள்ள மாணவ, மாணவிகளுக்கும் அதே மொழிகளையும் கற்றுக்கொடுத்து வருகிறார். தனது வகுப்பறையில் குழந்தைகளை அமர வைத்து பாடம் நடத்துகிறார். அவர்களது சந்தேகங்களை தீர்த்து வைக்கிறார். மேலும் தனது பாடங்களையும் அனாமிகா கற்று வருகிறார். மாணவியின் இந்த முயற்சி அந்த பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.