அன்லாக் 5.0 தளர்வுகளும், கட்டுப்பாடுகளும்

தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், பள்ளிகளை திறக்க தடை நீடிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், அக்டோபர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு போகும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர (Except Containment Zones)மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் குறிப்பாக

கீழ் கண்ட பணிகளுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது:

1) அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

2) திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு நெறிமுறைகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 100 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

3) தற்போது நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்களிலிருந்து 50 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ள நிலையில், இனி 100 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது.

இது தவிர கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில்

விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்

4) அரசு மற்றும் அரசுத் துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

5) ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வாரச் சந்தைகள் மட்டும் உரிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மத்திய அரசினால் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி, தமிழ்நாட்டில் 1ம் தேதி முதல், அரசு பொதுத் தேர்வு

எழுதும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் அனுமதித்து கடந்த 24ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் வழங்கிய அனுமதி குறித்து கவனமுடன் செயல்படலாம் என்ற மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் படியும், மருத்துவ நிபுணர்கள் அளித்த கருத்துக்களின் அடிப்படையிலும், தற்போதுள்ள கொரோனா நோய்ப்பரவலின் தன்மையை கருத்தில் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய அனுமதிக்கும் அரசாணை தற்சமயம் நிறுத்தி வைக்கப்படுகின்றது.

இது குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு உரிய நேரத்தில் அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுக்கப்படும்.

பொது :

1) மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 4ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்,

2) தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் (Containment zones) தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

1) பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும்.

2) திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் (Entertainment/ Amusement Parks), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தாங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை நீடிக்கும்.

3) மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

4) புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

5) மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.