கே.பி.ஆர். கலை கல்லூரியில் நுண்கலை மன்றத் தொடக்க விழா

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் நுண்கலை மன்றத் (Fine arts club) தொடக்க விழா இணைய வழியில் (Zoom – Platform) நடைபெற்றது.

இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல்துறை மாணவி செல்வி தீபதக்ஷனாவின் வரவேற்புரையைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமையேற்றுத் தலைமையுரை ஆற்றினார்.

தொடர்ந்து தமிழ்த் திரைப்பட நடிகரும் சிறப்பு விருந்தினருமாகிய நாசர் பேசுகையில், ரசனை என்பது மனிதனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? அது பணக்காரன், ஏழை என்கிற பாகுபாடு கடந்து மனித உணர்வுகளை முழுமைப்படுத்துகிறது என்றும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அழகியல் உள்ளது. அது தனிமனிதனின் அடையாளமாக, ஒரு சமூகத்தின் அடையாளமாக, நாட்டின் அடையாளமாக விளங்குகிறது.

ரசனைகளை உள்வாங்க வேண்டும், நமது தினசரி செயல்கள் ஒவ்வொன்றும் அழகியலோடு இருக்கவேண்டும் அழகியலைத் தனித்துப் பிரிக்கமுடியாது. அது வாழ்வியலோடு பிணைந்தது என்றார். நமக்கென்று ஒரு தனி அழகியல் உள்ளது என்றும் மேலைநாட்டு அழகியலை உள்வாங்கிக்கொண்டு நமது சொந்த அழகியலை இழந்து நிற்கிறோம்.

அவை மீட்டெடுக்கப்பட வேண்டும். கலையும் கலைசார்ந்த முன்னெடுப்புகளையும் மீட்டெடுக்க இயலும் என்கிற வகையில் கே.பி.ஆர். கல்லூரியில் நுண்கலை மன்றம் தொடங்கப்பட்டுக் கலைகளை மாணவர்களிடம் கொண்டுசெல்லும் ஒரு கலை வளர்ப்புச் சூழலை முன்னெடுத்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது என்றார்.

இவரை தொடர்ந்து டெல்லி, தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் மாணவரும் கர்நாடகா, நிநாசம் தியேட்டர் இன்ஸ்டிடியூட் மற்றும் சென்னை, 5w நாடக குழுவின் நிறுவனருமான திருநாவுக்கரசு பேசுகையில், ஒரு கல்வி நிறுவனத்திற்குள் ஏன் மன்றம் (Club) இருக்க வேண்டும். கலை ரீதியான செயல்பாடுகள் எதற்காக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கேள்விகளை முன்வைத்தோமேயானால் இதுபோன்ற கலை சார்ந்த ஈடுபாடுகள், ரசனைகள் தேவை.

ஒரு மனிதனை அவனது செயல்களில் நுணுக்கங்களுடன் வெற்றிகரமாக முடிக்கக் கலை உதவும். தனது முதன்மைப் பணியைத் தொடர, அதில் வெற்றியடைய, சாதனையாளராக வளர உதவும் என்பதாகத் தனது உரையை வழங்கினார். நிறைவாக, பேராசிரியர்கள் மாணவர்களின் வினாக்களுக்கும் ஐயங்களுக்கும் கலந்துரையாடல் வழி விடையளித்தார்.

இந்நிகழ்வில் புலமுதன்மையர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என 500 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுப் பயனடைந்தனர்.