நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் முறைகளை ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் இன்று 25.09.2020 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாநகராட்சி பாரதி பூங்கா அருகில் உணவு கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளிலிருந்து பெறப்படும் பயோ கேஸ் மூலம் மின் உற்பத்தி செய்யும் மையத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து பி.என்.புதூர் ரைட் ஹவுஸ் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பதற்க்காக தனித்தனியாக வைக்கப்பட்ட குப்பை சேகரிக்கும் தொட்டிகளிலிருந்து பெறப்பட்ட குப்பைகளை வாகனங்கள் மூலம் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை பார்வையிட்டும், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் பெறப்படும் காய்கறி கழிவுகளின் மூலம் மக்கும் குப்பைகளை கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் முறைகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.

மேலும், தெற்கு மண்டலத்தில் பொன்னையராஜபுரம் பழனிச்சாமி காலனியில் உள்ள பாலத்தின் கீழ் நீர் செல்லும் பாதையில் அடைப்புகள் ஏற்பட்டதை தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு அடைப்புகள் அகற்றப்பட்டுவரும் பணிகளை பார்வையிட்ட பின்னர், செல்வசிந்தாமணி குளம் புனரமைக்கப்பட்டு கரைகளை பலப்படுத்தும் பணிகளையும், பூங்கா அமைக்கப்பட்டுவரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மண்டல உதவி ஆணையாளர்கள் ரவி(தெற்கு), செந்தில் அரசன்(மேற்கு), உதவி பொறியாளர்கள் சுந்தர்ராஜன், ஹேமலதா, கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர்.