வீட்டுமனைப் பிரிவு அங்கீகாரம்: தமிழக அரசுக்கு ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு நன்றி

மலைப் பகுதிகளில் அமைந்துள்ள வீட்டுமனை பிரிவு மற்றும் வீட்டுமனைகளை வரன்முறைபடுத்தி DTCP அங்கீகாரம் பெறும்  சிறப்பு திட்டத்தை தமிழக அரசு நீட்டிப்பு செய்துள்ளதை பாராட்டி வரவேற்றுள்ளது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தேசிய தலைவர் ஹென்றி, வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது, கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், விழுப்புரம், விருதுநகர், தேனி, தர்மபுரி தற்பொழுது கிருஷ்ணகிரி, மதுரை போன்ற 15 மாவட்டங்களில், 42 தாலுகாவில் அடங்கிய 557 கிராமங்களில் உள்ள மலைகள் பாதுகாப்பு அதிகார குழுமத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அங்கீகாரம் இல்லாத பட்டா வீட்டுமனை மற்றும் வீட்டுமனை பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்க தடை நீடித்தது. இதுகுறித்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் தமிழக அரசு கோரிக்கையை  ஏற்று, கடந்த 30.3.2020 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தமிழ்நாடு மலைப் பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை பிரிவு மற்றும் வீட்டு மனை ஒழுங்குபடுத்துதல் சட்ட விதிகள் 2020, அரசாணை எண் 66ன் வாயிலாக சட்டமியற்றி, நடைமுறைக்கு கொண்டுவந்தது.

இதற்கு தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கும், முக்கிய காரணமான, மாநாட்டு கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடைமுறைப்படுத்த உதவிய, ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் எங்கள் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பாக பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும், இந்த சிறப்பு திட்டத்தில் வரன்முறை சட்டத்தின் கீழ் மேற்கண்ட இனங்களுக்கு அங்கீகாரம் பெற மாவட்ட வன அலுவலரிடமும், வேளாண் பொறியாளர் துறை செயற்பொறியாளரிடமும், புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குனரிடமும்,  வருவாய் கோட்டாட்சியரிடமும் தடையின்மை சான்று பெற்று சமர்ப்பிக்கும் வகையில் சட்டமியற்றி சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த ஆறு மாதங்களாக பொது மக்கள் அலைந்து திரிந்தும் மேற்கண்ட சிறப்பு திட்டத்தில் இதுவரை அங்கீகாரம் பெற இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேற்கண்ட துறைகளில் தடையின்மை சான்று பெறும் இந்த நடைமுறை வழக்கமான அங்கீகாரம் பெறும் வகையில் உள்ளதாகவும் பொதுமக்கள் மனம்  குமுறுகின்றனர்.

இது சிறப்பு திட்டம் என்பதால் அரசாணை எண் 78 மற்றும் 172 ல் உள்ளபடி, அரசாணை எண் 66லும் சட்ட விதிகளை மாற்றியமைத்து, எளிமைப்படுத்தி, விரைந்து அங்கீகாரம் பெறும் வகையில் வழி வகை செய்து, நடைமுறைப்படுத்திட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தும், தமிழக அரசுக்கு மேற்கண்ட அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு நன்றி தெரிவித்தும், கோரிக்கையை வைத்துள்ளது.