கோவை மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 7000 பேருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது

– அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 7000 நபர்களுக்கு வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது என்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணி கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, மேற்கு மண்டல காவல்துறை துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரநாயர், மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் (பொ) ரூபன்சங்கர்ராஜ், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) மருத்துவர் காளிதாசு, இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா, துணை இயக்குநர் (பொ) மருத்துவர் பாலுசாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் பேசுகையில், புதிய தொற்றுக்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், இந்தியாவிலேய அதிக பரிசோதனை தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக கோவை மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 7000 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.

மேலும், பொது மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிமுறைகளை தவறாமல் கடைபிடித்து  முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றார்.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இரண்டு மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.99,999 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி,  4 பயனாளிகளுக்கு தலா ரூ.8,000 மதிப்பிலான காதொலிக் கருவிகளும், ஒரு பயனாளிக்கு ரூ.4520 மதிப்பிலான ஒரு ஏர் பெட் என மொத்தம் ரூ.2,36,518 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.