கோவைக்கு 33 நகரும் நியாய விலைக் கடைகள்

தமிழகம் முழுவதும் நகரும் நியாய விலைக் கடைகள் செயல்பாட்டிற்கு வர உள்ள சூழலில், கோவைக்கு 33 நியாய விலைக் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் நியாய விலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு நுகர் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை ஒவ்வொரு பகுதிகளிலும் கடைகளாக செயல்பட்டு வந்த  நியாய விலைக் கடைகள், இனி நமது வீடு தேடி வரும் வகையில் ‘அம்மா நகரும் நியாய விலைக் கடை’ என்ற பெயரில் புதிய திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 21ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 9 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகளின் சேவையினைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக 7 அம்மா நகரும் நியாய விலைக் கடைகளின் வாகனங்களை முதலமைச்சர் சென்னையில் கொடியசைத்துத் துவங்கி வைத்தார்.

இந்த நிலையில், கோவையில் இது போன்ற 33 நகரும் நியாய விலைக் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,  இவை அனைத்தும் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.