பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ரோஸ் தினம்

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மெலிண்டா ரோஸ் என்ற 12 வயது சிறுமி நினைவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி உலக ரோஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவு சார்பில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வரும் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் நோயாளிகளுக்கு ரோஜா மலரை கொடுத்து குணமடைய வாழ்த்து தெரிவிக்கும் ரோஜா தினம் 2020 மருத்துவமனை வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

இதனை பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குநர் புவனேஸ்வரன் தொடங்கி வைத்தார். மேலும் இதில் புற்றுநோய் சிகிச்சை பிரிவின் மருத்துவர்கள் மதுலிகா விஜயகுமார், ரூமேஷ் சந்தர், பாஸ்கர் பாண்டியன் ராவ், புற்றுநோய் துறை இயக்குநர் பாலாஜி ஆகியோர் புற்றுநோய் நோயாளிகளுக்கு ரோஜா தினத்தினை முன்னிட்டு ரோஜா பூக்கள், பழங்கள் ஆகியவற்றைக் கொடுத்து அவர்களுக்கு குணமடைய வாழ்த்துகளை தெரிவித்தனர்.