கொரோனா தடுப்பு பணிகள் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டலம் வார்டு எண்-45க்குட்பட்ட நியூ முல்லை நகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருப்பவர்கள் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் கொரோனா பரிசோதனை செய்திட வேண்டும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் காலை, மாலை வேலைகளில் கிருமிநாசினி கொண்டு வீட்டை சுத்தப்படுத்திட வேண்டும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு காய்கறி, பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைத்திட தொடர்புடைய அலுவலர்கள் ஏற்படுத்தித்தர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, அதே பகுதியில் சுகாதார பணியாளர்கள் வீடுவீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களை நடமாடும் வாகனங்கள் மூலம் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுவரும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, அப்பகுதியில் குடிநீர் சீராக கிடைக்கப்பெறுகிறதா என பொதுமக்களிடம் கேட்டறிந்து அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றிட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.45 நாராயணசாமி லே அவுட் பகுதியில் நுண்ணுயிர் உரம் என்.சி.சி. தயாரிப்பு கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், சங்கனூர், கண்ணப்ப நகரில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் எரியூட்டும் மயானக் கட்டிடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இவ்வாய்வின்போது மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் மற்றும் பணி மேற்பார்வையாளர் உடனிருந்தனர்.