சிறப்பு ரயில்களில் கடந்த 10 நாட்களில் 45,000 பேர் பயணம்

கோவையிலிருந்து இயக்கப்பட்டு வரும் 5 சிறப்பு ரயில்களில், கடந்த 10 நாட்களில் 45 ஆயிரம் பேர் பயணித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை : செப்டம்பர் மாதம் 7ம் தேதி முதல் தமிழகத்தில் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், கோவையில் இருந்து 7ம் தேதி முதல் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவையில் இருந்து சென்னைக்கு 4 சிறப்பு ரயில்களும், மயிலாடுதுறைக்கு ஒரு சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டு வருகின்றது.

கோவையிலிருந்து காலை 6.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை சென்றடைகின்றது. கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு, காலை 7.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், பிற்பகல் 1.40 மணிக்கு மயிலாடுதுறையைச் சென்றடைகிறது. கோவையில் இருந்து சென்னைக்கு மாலை 3.15 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி ரயில் இரவு 11 மணிக்கு சென்னை சென்றடைகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு சென்னைக்கு புறப்படும் விரைவு சிறப்பு ரயில் மறுநாள் 4.50 மணிக்கு சென்னையைச் சென்றடைகிறது. கோவையில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில், மறுநாள் காலை 6.35 மணிக்கு சென்னையைச் சென்றடைகிறது.

இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்துள்ள பயணிகள், 90 நிமிடங்களுக்கு முன்பாகவே ரயில் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகு ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “கோவையில் இருந்து இயக்கப்படும் 5 சிறப்பு ரயில்களில், மயிலாடுதுறை, கோவை இன்டர்சிட்டி, மேட்டுப்பாளையம் – சென்னை சிறப்பு ரயில்களில் தினமும் 2,700 முதல் 3,000 ஆயிரம் பயணிகள் வரை செல்கின்றனர். கோவையில் இருந்து சென்னைக்கு இரவு செல்லும் விரைவு ரயில்களில் 1,500 முதல் 1,700 பயணிகள் வரை செல்கின்றனர். மொத்தமாக கோவையில் இருந்து இயக்கப்படும் 5 சிறப்பு ரயில்களில் தினமும் அதிகபட்சமாக 4,700 பயணிகள் வரை சென்று வருகின்றனர். கடந்த 7ம் தேதி முதல் 16ம் தேதி வரை 10 நாட்களில் 5 சிறப்பு ரயில்களிலும் சேர்த்து 45 ஆயிரம் பயணிகள் வரை வெளியூர் சென்றுள்ளனர்,” என்றார்.