நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச “இன்சுலின் பம்ப்”

டைப் 1 என்ற சிறு வயதிலேயே குழந்தைகளை பாதிக்கும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஊசியின்றி உடலில் இருந்தே இன்சுலின் செலுத்தும் “இன்சுலின் பம்ப்” உபகரணம்  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவையில் செயல்பட்டு வரும் இதயங்கள் அறக்கட்டளை சார்பில் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 5க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த உபகரணம் வழங்கப்பட்டது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நல்லறம் அறக்கட்டளை மற்றும் அம்மா ஐஏஎஸ் அகாடமி நிருவனருமான அன்பரசன் மாணவர்களுக்கு இன்சுலின் பம்ப் உபகரணங்களை வழங்கினார்.

இது தொடர்பாக இதயங்கள் பொதுநல அமைப்பின் தலைவரும் மருத்துவருமான கிருஷ்ணன்சாமிநாதன் கூறும்போது, டைப் 1 என்ற நீரழிவு நோய் என்பது அதிகமாக குழந்தைகளுக்கு வரக்கூடிய நோய்.

இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நாள் ஒன்றுக்கு 4முறை இன்சுலின் ஊசி போட்டுகொள்ள வேண்டியது அவசியம் என்றாலும் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த வேண்டிய நிலையும் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான அறிகுறிகள் என்பது இருக்காது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு சிறுநீரகம் பாதிப்பு செயலிழப்பு போன்றவை ஏற்பட  வாய்ப்புள்ளது என்றவர் தற்போது தங்களது அறக்கட்டளையில் இந்த நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட 500குழந்தைகள் உள்ளனர் என தெரிவித்தார்.

மேலும், இந்தியாவின் மக்கள் தொகையில் 1.15 சதவீதம் பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிப்படைந்துள்ளனர். அதாவது நாடு முழுவதும் 1.50லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வருடத்திற்கு மேலும் 5% அதிகரித்துவரும் நிலையில் இக்குழந்தைகளின் வாழ்க்கை நலனை கருத்தில் கொண்டே இந்த உபகரணம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள இந்த இன்சுலின் பம்பினை அரசு முன்வந்து பாதிப்புள்ளவர்களுக்கு முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.