காற்றுமாசுபாட்டை துல்லியமாகக் கண்டறியும் புதிய கருவி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எம்.எஸ்.சி. மின்னணுவியல்துறை, இன்னவேஷன்செல் ஆகியவை இணைந்து காற்றுமாசுபாட்டை மிகத்துல்லியமாகக் கண்டறியும் புதிய கருவியினைக் கண்டுபிடித்துள்ளது. எம்.எஸ்.சி. மின்னணுவியல்துறை மாணவர் டி.பிரசன்னகுமார் இந்த கருவியினை அறிமுகம் செய்ய எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை நிர்வாக அலுவலர் சி.வி.ராம்குமார் பெற்றுக்கொண்டார். கல்லூரியின் முதல்வர் பி.எல்.சிவக்குமார் மற்றும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வர் என்.ஆர்.அலமேலு ஆகியோர் இந்நிகழ்விற்கு முன்னிலை வகித்தனர்.

எம்.எஸ்.சி. மின்னணுவியல்துறை மாணவர் டி.பிரசன்னகுமார் இன்னவேஷன் செல்லில் காற்றுமாசுபாட்டை மிகத் துல்லியமாகக் கண்டறியும் இந்த புதிய கருவியினை சக மாணவர்களுடன் இணைந்து கண்டுபிடித்துள்ளார். இந்தக் கருவி நம்மைச் சுற்றி காற்று தூய்மையாக உள்ள நிலையில் பச்சை விளக்கைக் காட்டும், காற்றில் வேதியல் மாசு பரவும் போது சிவப்பு விளக்கைக் காட்டி நம்மை விழிப்புணர்வடையச் செய்வதோடு நம்முடைய கைப்பேசிக்கும் செய்தியினை அனுப்பி முன்னெச்சரிக்கை செய்கிறது. இதற்கு கே.ஒய்.ஏ (Know your Air) என்று பெயரிடப்பட்டுள்ளது. சுமார் இருபது சதுரஅடி பரப்பில் ஏற்படும் காற்று மாசுபாட்டினைக் கண்டறியும் வகையில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இது நவீன தொழில்நுட்பமான பர்சனல் அசிஸ்டன்ட் என்னும் வசதியிலும் உருவாக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு அம்சமாகும். இந்தக் கருவியினைக் கொண்டு ஒருவர் இருக்குமிடத்தைச் சுற்றி காற்றில் கலந்துள்ள நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களை மிகத் துல்லியமாகக் கண்டறிய முடியும். மனிதர்கள் கூடும் பொது இடங்கள், வீடு, அலுவலகம் என எல்லா இடங்களிலும் இதனைப் பயன்படுத்தலாம். குறிப்பாக வீட்டின் சமையலறையில் எரிவாயு கசிவு ஏற்பட்டால் கூட இக்கருவி அதனைக் காட்டிவிடும். வீட்டிலோ அலுவலகத்திலோ புகையிலையினை பயன்படுத்தும் போது அதில் உள்ள நிக்கோடின் போன்ற நச்சுபொருட்கள் கலப்பினையும் இது கண்டறிந்துவிடும். சுற்றுச்சூழல் மாசுபாட்டு விழிப்புணர்வில் இந்த கருவி ஒரு புதிய மைல்கல் என்றே கூறலாம்.

பொதுவாக மனிதர்கள் உயிர்வாழ ஆக்ஸிஜன் ஆதாரமாக உள்ளது. ஆனால் காற்றில் கார்பன் டை – ஆக்சைடு, வால் டைல் ஆர்கானிக் காம்பவுண்ட் ஆகிய வேதிப்பொருட்கள் கலக்கும் போது சுவாசத்திற்கு தீங்கு விளைவிக்கும். கண்ணுக்குத் தெரியாத இந்த மாசுபாட்டினைக் கண்டறிய அனைவரும் பயன்படுத்தலாம். குறிப்பாக சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்தி முன்னெச்சரிக்கையுடன் தங்கள் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளலாம். இந்த கருவியின் அறிமுகவிழாவில் எம்.எஸ்.சி. மின்னணுவியல் துறைத் தலைவர் பூர்ணிமா, இன்னவேஷன் செல்லினுடைய ஒருங்கிணைப்பாளர்களான ஹரிபிரசாத், சந்தானம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.