கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லூரியின் பைந்தமிழ் மன்றம் நிகழ்ச்சி

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் பைந்தமிழ் மன்றம் நடத்திய  நல் இறைச்சிந்தனை நிகழ்வு இணைய வழியில் (zoom – தளத்தில்) நடைபெற்றது.

மங்கள இசையுடன் தொடங்கிய இந்நிகழ்வில் தமிழ்த்துறைப் பேராசிரியர் கோகுல்நாத் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமையேற்றுச் சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர் அறிமுகத்தைத் தொடர்ந்து, திருநெல்வேலி, சங்கர் மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர், கவிஞர்.கோ.கணபதிசுப்ரமணியன் பேசுகையில், வள்ளுவரின், “ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றித் தாழாது உஞற்று பவர்” என்னும் திருக்குறளைச் சுட்டிக்காட்டி உழைப்பின் பயனாய் விதியையும் மதியால் வெல்லலாம் என்பதாகத் தனது உரையைத் தொடங்கினார். எப்படி வேண்டுமானாலும் வாழ்வது வாழ்க்கையல்ல; குறிக்கோளுடன் வாழ்வதுதான் வாழ்க்கை என்பதை எடுத்துரைத்தார்.

மேலும், மகாகவி பாரதியார் பயின்ற பள்ளியில் தானும் பயின்றது பெருமகிழ்ச்சி அளிப்பதாக பெருமிதம் கொண்டார். குமரகுருபரர் சிறுவயதில் வாய்பேச முடியாதிருந்து பின்பு திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் அருள்பெற்று கந்தர்கலிவெண்பா அருளிய வரலாற்றினையும் மாம்பழக்கவிச்சிங்க நாவலர் கண்பார்வை இழந்தும் அம்மையின் அருளால் பல பிரபந்தங்கள் அருளிய வரலாற்றினையும் திருச்செந்தூர் திருக்கோயிலின் பன்னீர்இலை திருநீற்றின் மகிமையினையும் விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும், திருமழிசை ஆழ்வார், கனிகண்ணன் ஆகியோர் பின்னால் தமிழ் மொழிக்காக திருமால் சென்றதைக் குறிப்பிட்டார். திருவிளையாடற்புராணத்தின் வழி பன்றிக்குட்டிகளுக்கு சிவபெருமான் பால் கொடுத்த அருள் வரலாற்றினையும் சிவபெருமான் வந்திக்கிழவியின் பிட்டிற்காக மண்சுமந்த வரலாற்றினையும் கூறி, மார்க்கண்டேயர் இறைவன் திருவருளால் என்றும் இளமைக் கோலம் பெற்ற வரலாற்றினையும் நயமுடன் எடுத்துரைத்தார்.

துன்பம் வரும் போது இறைவனை நினையுங்கள், வாழ்வில் இன்பம் பெறலாம் என்று மாணவர்களுக்கு நல்லுரை வழங்கினார். திருச்சி மலைக்கோட்டை இறைவன் தன்னடியாரின் துயர்தீர்க்க தாயுமானவராகத் தோன்றிப் பிரசவம் பார்த்த வரலாற்றினையும் சமயக்குரவர்கள், சந்தானக்குரவர்கள் ஆகியோரின் அருட்செயல்களையும் அழகுற எடுத்துரைத்தார். முடிவில், அருளாளர்கள் பாடியருளிய அருட்பாடல்களைச் சுட்டிக்காட்டி அவற்றை மாணவர்கள் பாராயணம் செய்யுமாறும் எடுத்துரைத்து நிறைவுசெய்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் தமிழ்த்துறைப் பேராசிரியர் தமிழரசன் நன்றிகூற நிகழ்வு இனிதே நிறைவடைந்தது. இந்நிகழ்வில் முதன்மையர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் என 120 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.