குப்பைகளை தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளை உரமாக்கப்படுவது குறித்து ஆய்வு

கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களில் இருந்து சேகரிக்கப்படும்  குப்பைகளையும், பீளமேடு மற்றும் உக்கடம் குப்பை இடமாற்று மையங்களிலிருந்து கொண்டுவரப்படும் குப்பைகளை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் உள்ள தரம் பிரிக்கும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வரப்பட்ட குப்பைகளை இயந்திரங்கள் மூலமாக மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என தரம் பிரிக்கப்படுகிறது. இவ்வாறு இயந்திரங்கள் மூலம் தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்கப்படும் பணிகளையும், அவ்வாறு தயாரிக்கப்பட்ட உரங்களை பேக்கிங் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஒண்டிப்புதூரில் வீடில்லா நாய்களின் கருத்தடை அறுவைச் சிகிச்சை அளிப்பதற்காக புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அறுவைச் சிகிச்சை மையத்தை ஆய்வு செய்து, அம்மையத்தில் நாய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்த பின்னர் ஒண்டிப்புதூரில் செயல்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, ஒண்டிப்புதூரில் மகளிர் காப்பகம் அமைப்பதற்கான இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாநகரப்பொறியாளர் பார்வதி, செயற்பொறியாளர்கள் (ஸ்மார்ட் சிட்டி) சரவணக்குமார், ஞானவேல், உதவி பொறியாளர்கள் ரவிக்கண்ணன், ஹேமதலா, தனியார் நிறுவனத்தின் மேலாளர் தனசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.