பண்டிகை தினங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்

 – கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை: மஹாலய அமாவாசை, புரட்டாசி சனி மற்றும் பிரதோஷம் ஆகிய முக்கிய நிகழ்வுகள் அடுத்தடுத்து வருவதை முன்னிட்டுää வழிபாடு மற்றும் சடங்குகளுக்காக (தர்ப்பணம் கொடுத்தல்) பொதுமக்கள் கோயில்கள் மற்றும் கோயில் ஒட்டிய ஆற்றுப் பகுதிகளில் கூடுவதை அவசியம் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

அரசு உத்திரவின் படி நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளதிருக்கோயில்களில், பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில்களில், பொதுமக்கள் தரிசனம் செய்யும் போதுகூட்டத்தினைத் தவிர்த்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முககவசம் அணிந்து இருக்கவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மஹாலய அமாவாசை, புரட்டாசி சனி மற்றும் பிரதோஷம் ஆகிய முக்கிய நிகழ்வுகள் அடுத்தடுத்து வருவதை முன்னிட்டு வழிபாடு மற்றும் சடங்குகளுக்காக (தர்ப்பணம் கொடுத்தல்) பொதுமக்கள் கோயில்கள் மற்றும் கோயில் ஒட்டிய ஆற்றுப் பகுதிகளில் கூடுவதை அவசியம் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், முக்கிய கோயில்களின் அருகே உள்ள மண்டபங்களை சடங்குகள் மற்றும் இதர பயன்பாட்டிற்கென பொதுமக்களுக்கு வாடகைக்கு வழங்குவதற்கு அதன் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து உரியமுன் அனுமதிபெற்றிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மண்டபங்களில் கூட்டம் சேராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது மண்டப உரிமையாளரின் பொறுப்பாகும்.

மேற்படி நிகழ்வுகளின் போது திருக்கோயில்கள், கோயில் ஒட்டிய ஆற்றுப்பகுதிகள் மற்றும் மண்டபங்களில் அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டி நடைமுறைகள் பொதுமக்களால் சரிவரபின்பற்றப்படுகிறதா என்பது குறித்து இந்துசமய அறநிலையத்துறை, காவல் துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களால் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி கேட்டுக்கொண்டுள்ளார்.