போஜன் அபியான் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறையின் மூலம்  இன்று (14-09-2020) ஊட்டசத்து மாதம் (போஜன் அபியான்) திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி, ஊட்டச்சத்து மிக்க தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. வளமான ஊட்டசத்து நிறைந்த குழந்தைகளை உருவாக்க மற்றும் பாராமரிப்பது பற்றியும், சமூதாய வீட்டுத் தோட்டம் அமைப்பதன் முக்கியத்துவம், கிரமப்பகுதிகளில் தரம் உயர்த்தவேண்டிய அங்கண்வாடி மையங்கள், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல், இரத்தசோகை தவிர்த்தல், ஊட்டசத்து விழிப்புணர்வு குறித்த செயலாக்கத் திட்டங்களை வீடுகள் தோறும் கொண்டு சேர்த்தல் போன்றவற்றினை அடிப்படையாக கொண்டு போஷன் மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

ஒரு குழந்தையின் சுகவீனத்துக்கு சத்தின்மை மட்டுமே காரணம் அல்ல. அத்துடன் தொடர்புடைய, குழந்தை முதிரா நிலை, குறைவான எடையில் பிறத்தல், நிமோனியா, வயிற்றுப்போக்கு, பிறப்பு மூச்சுத்திணறல், பிறப்பு அதிர்ச்சி, காயங்கள், பிறவி முரண்பாடுகள், கடுமையான பாக்டீரிய சீழ்ப்பிடிப்பு, கடும் தொற்றுகளால் திறன் குறைதல் போன்றவையும் காரணங்களாக அமைகின்றன.

போஷன் மா திட்டம் எனப்படும் தேசிய ஊட்டச்சத்துத் திட்டமானது இதுபோன்ற குறைபாடுகள் குறித்து கிராமப்புறங்களில் விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு கருவியாக செயல்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் ஒருங்கிணைந்த திட்டங்களாக, அங்கன் வாடி சேவை மையம், பிரதம மந்திரி மற்றும் வந்தன யோஜனா, தேசியச் சுகாதாரப் பணி, உணவு மற்றும் பொது விநியோகத் திட்டம், குடிநீர் மற்றும் சுகாதாரத் திட்டம் ஆகியன உள்ளன.

மனிதன் நலமாக வாழ்வதற்குத் தேவையான ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மேலும், உடல் வளர்ச்சி, ஊட்டச்சத்து நிறைந்த தானியங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள், பழங்கள், காய்கறிகள், கொழுப்பில்லா உணவுகள், கீரைகள் போன்றவற்றைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தினை பேணமுடியும். இதற்கென அனைத்து வீடுகளிலும், அங்கன்வாடிகள் பள்ளிகள் ஆகியவற்றில் சிறு காய்கறி, கீரை தோட்டமைப்பதை அலுவலர்கள் ஊக்கப்படுத்திட வேண்டும்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், செப்டம்பர் மாதத்தினை ஊட்டச்சத்து மாதமாகவும் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் இம்மாதத்தில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஒவ்வொருவருக்கும் உணவுமுறையில் கிடைக்கப்பெறும் சத்துகளைப் பற்றிய முக்கியத்துவம் சென்றடைந்ததுடன், ஒட்டு மொத்த ஊட்டச்சத்து, குழந்தைகளுக்குக் கட்டாயத் தாய்ப்பால் உணவு, முழு உணவு, அந்தந்தக் காலத்தில் தடுப்பூசி போடுதல், குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்காணித்தல், உணவு வலுவூட்டுதல், மற்றும் நுண்ணூட்டம் பற்றிய விழிப்புணர்வு, வயிற்றுப்போக்கு, சுத்தம், சுத்தமான நீர், சுகாதாரம், பருவக் கல்வி, உணவு முறை, உணவு, திருமண வயது, கர்ப்பக் காலத்தில் பெண்களின் உடல் எடை, உயரம், இரத்தழுத்தம், உணவில் கூடுதல் கால்சியம் சேர்த்தல் போன்றவற்றைச் சோதனை செய்தல், குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்வி, உள்ளிட்டவை தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

சரியான வயதில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புதல், நோயுறுவதைக் குறைத்தல் மற்றும் ஊட்டச்சத்தைக் கூட்டுதல் குறித்த செய்திகளைப் பரப்புதல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும். இத்திட்டம் முக்கியத்துவம் அறிந்து ஒவ்வொரு அலுவலர்களும் வளமான சமூதாயம் உறுவாக ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தினை அனைத்து தரப்பினரும் அறியச் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறையின் திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்) மீனாட்சி, துணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் குடும்பநலம்) கிருஷ்ணா, மகளிர் திட்ட அலுவலர் செல்வராசு, மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பிரபாகரன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.