பிரபல நடிகர் சூர்யாவின் கருத்து எவ்வகையிலும் நீதிமன்ற அவமதிப்பு ஆகாது

-தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை

‘நீட்’ தேர்வு குறித்து நடிகர் சூர்யா தெரிவித்திருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்தின் பிரதிபலிப்பே. மேலும், நீதிமன்றம் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து உள்நோக்கம் கொண்டதும் அல்ல அவமதிப்பும் அல்ல. மாண்பமை நீதிபதி தம் முடிவை சுயபரிசோதனை செய்வது அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ள அறிக்கையில், ‘நீட்’ தேர்வின் கொடுமையால் எத்தனையோ மாணவ, மாணவிகளின் உயிர்ப் பலி வாங்கப்பட்டிருக்கும் நிலையில், மனிதாபிமானமும், சமூகநீதியில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் அதனை ‘ரத்து’ செய்யவேண்டும் என்பதை எதிரொலிக்கிறார்கள்.

நடிகர் சூர்யா அவர்கள் தொடக்கத்திலிருந்தே ‘நீட்’ தேர்வு பற்றியும், தேசிய கல்விக் கொள்கை பற்றியும் தனது கருத்தை தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்தக் கருத்துகள் பல லட்சக்கணக்கான பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கருத்து என்ற நிலையில், தெளிவாக ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அது மக்கள் கருத்தின் ஒலி முழக்கம்தான்.

இந்தக் கொரோனா கொடுந்தொற்று காலத்தில்கூட, மற்ற தேர்வுகள் எல்லாம் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், ‘நீட்’ தேர்வில் மட்டும் மத்திய அரசு இப்படி பிடிவாதம் பிடிப்பது ஏன் என்ற கேள்வியும், அதன் விளைவாக மாணவச் செல்வங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை விளக்கவே சூர்யா அவர்கள் கொடுத்த அறிக்கையில், காணொலி மூலம் கூட ‘நீட்’ தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல், நேரில் வந்துதான் எழுதி ஆகவேண்டும் என்பது நியாயம்தானா? என்பதை வலியுறுத்தவே, நீதிமன்றங்கள் கூட காணொலி மூலம் நடைபெறும் நிலையில், இதற்கு மட்டும் ஏன் இப்படி ஒரு அழுத்தம் தரப்படல் வேண்டும் என்றுதான் கேட்கிறார் நண்பர் சூர்யா – ஒப்பீடு செய்து காட்டினார் அவ்வளவே!

அது எவ்வகையிலும் நீதிமன்ற அவமதிப்பு ஆகாது. நாட்டின் நடப்பை ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். அது ஒரு தகவல், அவ்வளவுதான்! அதற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார் என்ற செய்தி நாட்டில் கருத்துச் சுதந்திரத்தினைத் தவறாக எடுத்துக்கொண்ட அல்லது புரிந்துகொண்ட ஒரு நிலைப்பாடாகும்!

கருத்து சுதந்திரத்தைத் தாராளமாக பாதுகாக்க வேண்டிய அரசமைப்புச் சட்டத்தின்படி பிரமாணம் எடுத்துக் கடமையாற்றும் நீதிபதிகளின் கடமை என்பதால், அவர்கள் நடிகர் சூர்யாமீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறுவது எந்த அளவிற்குச் சரியானது? என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

எந்த உள்நோக்கமும் அதில் இல்லை. நீதிமன்றங்களின் மதிப்பை அது எவ்வகையிலும் குறைக்கும் அறிக்கையாகவும் இல்லை. எனவே, இதுபோன்று ஒரு புகார் மனு செய்வது இந்தக் காலகட்டத்தில், அதுவும் உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன் வழக்கு தீர்ப்பு மேல்முறையீடு மறுசீராய்வு என்று ஒருபுறத்தில் நடந்து, நாட்டின் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதிகளும், சமூக ஆர்வலர்களும், சட்ட வல்லுநர்களும் பல கருத்துகளை எது விமர்சனம், எது அவமதிப்பு என்பதை நன்கு விளக்கி தெரிவித்துள்ள நிலையில், இப்படி ஒரு விவாதத்திற்குரிய பிரச்சினையை மாண்பமை நீதிபதி ஒருவர் எழுப்பியது  மிகவும் வருந்தக்கூடிய ஒன்று,’ எனத் தெரிவித்துள்ளார்.