இந்துஸ்தான் மாணவர்களின் செய்முறை பயிற்சிக்காக ஃபோர்டு நிறுவனம் கார் வழங்கல்

சென்னை ஃபோர்டு இந்தியா நிறுவனம், கோவையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களின் செய்முறை மற்றும் ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய சுமார் 22 லட்சம் மதிப்புள்ள ஃபோர்டு எக்கோஸ்போர்ட் காரை “கல்வியை மேலும் உயர்த்துவது” என்ற முயற்சிக்காக இலவசமாக வழங்கியுள்ளது.

இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் மற்றும் செயலாளர் பிரியா சதீஸ்பிரபு ஆகியோர் காரின் சாவியை வழங்க முதன்மை செயல் அலுவலர் கருணாகரன், கல்லூரியின் ஆட்டோமொபைல் துறைத் தலைவர் சபரிநாதன் மற்றும் ஆசிரியர்கள் பெற்றுக்கொண்டனர்.

மேலும் சரஸ்வதி கண்ணையன் பேசுகையில், ஃபோர்டு எக்கோஸ்போர்ட் வாகனத்தின் பன்முக தொழில்நுட்பம் ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் மற்றும் மெக்கட்ரானிக்ஸ் துறை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். பிரியா சதீஸ்பிரபு பேசுகையில், திறன் மிகுந்த மாணவர்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அறிந்த ஃபோர்டு இந்தியா நிறுவனத்திற்கு நன்றி என்றார்.

மேலும் முதன்மை செயல் அலுவலர் கருணாகரன் கூறுகையில், ஃபோர்டு இந்தியாவின் இம்முயற்சி தற்போதைய சூழ்நிலைகளில் திறமை மிகுந்த மாணவர்களை உருவாக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார்.

ஆட்டோமொபைல் துறைத் தலைவர் சபரிநாதன் பேசுகையில், சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய 167 எச்.பி. திறன் கொண்ட 2.0 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்க்ஷன் பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர், ஏர்பேக் சிஸ்டம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களான விபத்து ஏற்பட்டால் தகவல் கொடுப்பது, வேகக்கட்டுப்பாடு அமைப்பது, டயர் காற்றின் அளவை மதிப்பிடுவது போன்ற அனைத்து தொழில்நுட்பமும் இந்த காரில் உள்ளது. மேலும் இதன்மூலம் மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி, செயல்முறை விளக்கப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்காக இந்த ஃபோர்டு எக்கோஸ்போர்ட் கார் ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் என்றார்.