ஆச்சார்யா வினோபா பாவே பிறந்த தினம்

சுதந்திரப் போராட்ட வீரரும், பூமிதான இயக்கத்தின் தந்தையுமான ஆச்சார்ய வினோபா பாவே 1895 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்தார்.

இவர் ‘மகாராஷ்டிர தர்மா” என்ற மாத இதழை 1923 ஆம் ஆண்டு தொடங்கினார். கதர் ஆடை, கிராமத் தொழில்கள், கிராம மக்களின் கல்வி, சுகாதார மேம்பாட்டுக்காகவும், தீண்டாமை ஒழிப்புக்காகவும் பாடுபட்டார்.

தேவையுள்ளவர்கள் அதிகம் இருக்கும் இந்நாட்டில், கொடுக்கும் மனம் உள்ளவர்களும் நிறைய பேர் இருப்பதைப் புரிந்துகொண்ட வினோபா, இரு தரப்பினருக்கும் பாலமாக இருக்க முடிவு செய்தார். இதன் அடிப்படையில் ‘பூதான்” எனப்படும் பூமிதான இயக்கத்தைத் தொடங்கினார். எனவே, இவர் பூமிதான இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

இவர் 13 ஆண்டுகளில் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் நடைப்பயணம் மேற்கொண்டார். சுமார் 40 லட்சம் ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்றார்.

‘என்னைவிட காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக்கொண்டவர்” என்று காந்திஜியால் புகழாரம் சூட்டப்பட்டவர். மக்களாலும், தலைவர்களாலும் ‘ஆச்சார்யா” என்று போற்றப்பட்ட வினோபா பாவே 1982 ஆம் ஆண்டு மறைந்தார்.