சரித்திரக் கதாசிரியர் ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம்

புகழ்பெற்ற எழுத்தாளரும், தமிழில் சரித்திரக் கதைகளின் முன்னோடியுமான ‘கல்கி” ரா.கிருஷ்ணமூர்த்தி 1899 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையை அடுத்த புத்தமங்கலத்தில் பிறந்தார்.

இவர் எழுதிய பிரச்சாரத் துண்டுகளைப் பார்த்த காங்கிரஸ் தலைவர் டி.எஸ்.எஸ்.ராஜன், ‘நீ எழுத்துலகில் சாதிக்க வேண்டியவன்” என்றார். அவரது ஆலோசனைப்படி ‘நவசக்தி” பத்திரிகையில் சேர்ந்தார்.

நண்பர் டி.சதாசிவத்துடன் சேர்ந்து சொந்தமாக பத்திரிகைத் தொடங்க விரும்பினார். சதாசிவத்தின் மனைவி எம்.எஸ்.சுப்புலட்சுமி வழங்கிய நிதியுடன் ‘கல்கி” பத்திரிக்கை தொடங்கப்பட்டது. இவரது படைப்பாற்றலால் பத்திரிக்கை விரைவிலேயே அபார வெற்றி பெற்றது.

இவர் 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவரது ‘பார்த்திபன் கனவு” தமிழின் முதல் சரித்திர நாவலாகும். அடுத்து வந்த வரலாற்றுப் புதினமான ‘சிவகாமியின் சபதம்”, சமூகப் புதினமான ‘அலை ஓசை” ஆகியவையும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

1951ஆம் ஆண்டு எழுதத் தொடங்கி 3 ஆண்டுகள் தொடராக வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்” நாவல், கல்கியின் பெயருக்கு வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றுத்தந்தது. அது இன்றுவரை பலமுறை மறுபதிப்பு செய்யப்படுகிறது. ‘கல்கி” இதழில் மீண்டும் மீண்டும் தொடராக வெளிவருகிறது.

முன்னோடிப் பத்திரிக்கையாளர், புனைக்கதை எழுத்தாளர், கலை விமர்சகர், கட்டுரையாளர், பாடலாசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர் எனப் பன்முகத்தன்மை கொண்ட கல்கி 1954ஆம் ஆண்டு மறைந்தார். இவரது படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.