இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் காஷ்மீரில் 7,000 கோடி டன் பனிப்பாறை உருகியது: பருவநிலை மாற்றத்தால் அபாயம்

இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் காஷ்மீரில் 7,000 கோடி டன் பனிப்பாறை உருகியது: பருவநிலை மாற்றத்தால் அபாயம்

ஸ்ரீநகர்: ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகும் அளவு அதிகரித்து கொண்டே வருகிறது. உலகின் மிக உயரமான மலைத் தொடர் இமயமலை, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த மலைகளில் ஏராளமான பனிப்பாறைகள் இருக்கின்றன. இவை வட இந்தியாவில் ஓடும் பல்வேறு நதிகள், ஆறுகளுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த பனிப் பாறைகள் உருகும் வேகம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு வெப்பநிலை அதிகரிப்பு, பருவநிலை மாறுபாடே காரணம் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக 2000ம் ஆண்டில் நாசா, 2012ல் ஜெர்மனி விண்வெளி மையம் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்கள், ஆராய்ச்சிகள், பல்வேறு தரவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீநகரில் செயல்படும் காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் புவிசார் தகவல் துறை, புவி அறிவியல் துறை இணைந்து ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் பற்றி கூறப்பட்டுள்ளதாவது:

ஜம்மு, காஷ்மீர், லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள 12,243 பனிப்பாறைகள் பற்றி நடத்திய ஆய்வில், அதன் பருமனில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

பொதுவாகவே, இப்பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுவது அதிகரித்து காணப்பட்டாலும், பிர் பன்ஜால் பகுதியில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ஒரு மீட்டருக்கும் அதிகமாக பனிப்பாறைகள் உருகி வருவது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வுகளின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 7 ஆயிரம் கோடி டன் பனிப்பாறைகள் உருகி இருப்பது தெரிய வந்துள்ளது. ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளில் பனிப்பாறைகள் தொடர்ந்து உருகுவதால், அப்பகுதிகளின் நீர், உணவு, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றை சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு வாயு, படிம எரிபொருள் பயன்பாடு ஆகியவற்றினால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டாலும், ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளில் தொழிற்சாலைகள் இல்லையெனினும், கடுமையான பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெப்பம் அதிகமாகும்

‘பருவநிலை மாற்றம்’ இதழின் ஜூலை பதிப்பில், `ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வந்தால், இந்நூற்றாண்டின் முடிவில் பருவநிலை மாற்றத்தினால், அங்கு தட்ப வெப்பநிலை 6.9 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த கணிப்பு உண்மையாகும் பட்சத்தில், இமயமலை பகுதியில் உள்ள பனிப்பாறைகளில் 85 சதவீதம் உருகி கரைந்து விடும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

* ஜம்முவின் கரகோரம் பகுதியில் ஆண்டுக்கு 10 செ.மீ. மட்டுமே பனிப்பாறை உருகியுள்ளது.
* இதர மலைப் பகுதிகளான இமயமலை, ஜனாஸ்கர், ஷாமபாரி, லே உள்ளிட்ட பகுதிகளில் வெவ்வேறு அளவுகளில் பனிப்பாறைகள் உருகி வருகின்றன.
* கடந்த 2000ம் முதல் 2012ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், இமயமலை பகுதியில் உள்ள 1,200க்கும் மேற்பட்ட பனிப்பாறைகளை ஆய்வு செய்ததில், ஆண்டுக்கு சராசரியாக 35 செ.மீ. வரை உருகி இருப்பது கண்டறியப்பட்டது.
* அதிலும் 7 பனிப்பாறைகள் மட்டும் பருமன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
* அதே நேரம், சிந்து படுகையின் மேற்பரப்பில் 12,000க்கும் அதிகமான பனிப்பாறைகளின் பருமனை கண்டறியும் ஆராய்ச்சி நடந்து வருகிறது.